Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

கரோனா அச்சுறுத்தல் காலத்திலும் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்தது சாதனை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ பெருமிதம்

சென்னை

கரோனா அச்சுறுத்தல் காலத்திலும்சட்டப்பேரவைத் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்திருப்பதை சாதனையாக கருதுகிறோம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் வி.ராஜாராமன், ஆனி ஜோசப், இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் டி.ஆனந்த், அஜய் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள், அவர்களுக்கு கீழ் பணியாற்றும் அலுவலர்களின் அயராத உழைப்பால் சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. பெரிய அளவில் சிக்கல்கள் ஏதுமின்றி தேர்தலை நடத்தி முடித்தமகிழ்ச்சியில் இருந்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தோம். ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

வாக்காளர் பட்டியலில் இருந்துதங்கள் பெயர் நீக்கப்பட்டுவிட்டதாக கூறி குறிப்பிடும் படியாகயாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லையே, ஏன்?

வாக்காளர் பட்டியலில் இருந்துபெயர் நீக்கலை கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டும்என்று அறிவுறுத்தி இருந்தோம். சிறப்பு முகாம்களில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு மூலம், மக்கள் அதிக அளவில் வந்து பட்டியலை சரிபார்த்ததால், புகார்கள் எழவில்லை.

வாக்குப்பதிவின்போது, இயந்திரங்களில் பழுது ஏற்படுவதும் குறைந்துள்ளதே?

2019 மக்களவைத் தேர்தலின்போது கிடைத்த படிப்பினை அடிப்படையில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டதால் இயந்திரப் பழுது குறைந்துவிட்டது.

அமைதியான தேர்தலுக்காகஎடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து?

தேர்தலில் முக்கிய அங்கத்தினரே கட்சியினரும், வேட்பாளர் களும்தான். அவர்கள் அளிக்கும்தகவல்கள் மீது சிறப்பு கவனம்செலுத்தியதால் குறிப்பிடும்படியான அசம்பாவிதங்கள் இல்லை.தேர்தல் பணிகள் அனைத்தும் அரசியல் கட்சிகள் முன்னிலையில் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டதால், அவர்களுக்கு நம்பகத்தன்மை ஏற்பட்டதும் ஒருகாரணம். முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டதிலும் இதுவரை ஒரு புகாரும் எழவில்லை.

இந்தத் தேர்தலில் எதை சவாலாக பார்க்கிறீர்கள்?

கரோனா அச்சுறுத்தல் காலத்திலும் தேர்தலை சிறப்பாக நடத்திமுடித்ததை சாதனையாக கருதுகிறோம். கரோனா காலத்தில் எல்லாநடைமுறைகளும் புதிது. மாலை 6 முதல் 7 மணி வரை மட்டுமே கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவர். வழக்கமான நேரங்களில் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தி, வாக்காளர்களை அதிக அளவில் வரவழைத்தது பெரும் சவாலாக இருந்தது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இப்போது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதாக கட்சிகள் புகார் தெரிவித்தன. அதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. கரோனாபரவல் காலத்தில் தேர்தலைநடத்தியதால், 30 சதவீத வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டன. அதற்கேற்ப கூடுதல் பணியாளர்கள், பாதுகாப்பு வீரர்களை பணியில் ஈடுபடுத்தியதும் ஒரு சவால்தான்.

தேர்தலை சிறப்பாக நடத்திமுடித்ததில் தேர்தல் அலுவலர்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?

தேர்தல் என்பது ஒரு கூட்டுப் பணி. இதில் தலைமை இடத்து அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர்கள் வரை சிறப்பாக பணியாற்றியதால்தான் தேர்தலை சிக்கல் இன்றி முடிக்க முடிந்தது. இந்த தேர்தலை நீதிமன்றமும் கண்காணித்து வந்தது. குறிப்பாக தலைமையிடத்தில் உள்ள கூடுதல்மற்றும் இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் அனைவரும் இரவு, பகல் பாராது உழைத்தனர். நீதிமன்றங்கள் கேட்கும்கேள்விகள், தேர்தல் ஆணையம் கேட்கும் கேள்விகள் உள்ளிட்டவற்றுக்கு காலத்தோடு பதில்அளிப்பது, அனைத்து மாவட்டஆட்சியர்களையும் ஒருங்கிணைப்பது போன்ற பணிகளை சிறப்பாக செய்ததால், தேர்தலை நல்ல முறையில் நடத்தி முடிக்க முடிந்தது. இதற்கு காவல்துறையின் பங்கும் மிக முக்கியம். தேர்தல்பணியில் ஈடுபட்ட அனைத்து துறை, அனைத்து நிலை பணியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x