Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

‘ரூ.2,000-க்கு மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்'- கும்பகோணத்தில் அரசியல் கட்சியிடம் டோக்கன் வாங்கி ஏமாந்த வாக்காளர்கள்

கும்பகோணத்தில் உள்ள ஒரு மளிகைக்கடையின் பெயரை அச்சிட்டு, ரூ.2 ஆயிரத்துக்கு மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என ஒரு அரசியல் கட்சி சார்பில் வழங்கப்பட்ட டோக்கனை வாங்கிய வாக்காளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்று முடிவடைந்தது. இதையொட்டி, கும்பகோணம் தொகுதியில் தங்களுக்கு சாதகமாக வாக்களிக்கக் கோரி வாக்காளர்களுக்கு ஒரு அரசியல்கட்சி சார்பில், பெரிய கடைத் தெருவில்உள்ள ஒரு மளிகைக் கடையின் பெயரைக் குறிப்பிட்டு “ரூ.2 ஆயிரத்துக்கு மளிகைப்பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்” என டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, கடந்த 5-ம் தேதி இரவுமுதல் அந்த மளிகைக் கடைக்கு வாக்காளர்கள் சென்று, அந்த டோக்கனைக் கொடுத்து, மளிகைப் பொருட்கள் கேட்கத் தொடங்கினர். ஆனால், அந்த டோக்கனுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என கடை உரிமையாளர் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆனாலும், டோக்கனுடன் வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், “வேட்பாளர் வழங்கிய டோக்கனுக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தனது கடை வாசலில் அறிவிப்பை ஒட்டினார். அதன் பிறகுதான், அந்த அரசியல் கட்சியால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை பொதுமக்கள் உணர்ந்தனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் கே.ஷேக்முகமது கூறியதாவது: நான் 25 ஆண்டுகளாக இங்கு கடை நடத்தி வருகிறேன். எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நான் டோக்கன் வழங்கியது இல்லை. ஆனால், கடந்த 5-ம் தேதி இரவில் இருந்து என்னுடைய கடை முகவரி அச்சிட்ட டோக்கனை பலர் கொண்டு வந்து, இலவசமாக மளிகைப் பொருட்களை கேட்கின்றனர். 5-ம் தேதி இரவு மட்டும் 200 பேருக்கும் மேல் கடைக்கு வந்து பொருட்களை கேட்டனர். நான் அப்படி யாருக்கும் டோக்கன்கொடுக்கவில்லை எனக் கூறி, திருப்பிஅனுப்பியதுடன் அது தொடர்பான அறிவிப்பையும் என் கடை வாசலில் ஒட்டிவிட்டேன்.

தொடர்ந்து, இன்று (நேற்று) கடையை திறந்ததும் பலர் டோக்கனுடன் வந்தனர். அவர்களிடம் நான் உண்மையை எடுத்துக் கூறியதையடுத்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனது கடை பெயரைப் பயன்படுத்தி, இந்த டோக்கனை யார் கொடுத்தது என தெரியவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x