Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

கொய்யா மரத்தில் ஊட்டச்சத்து மேலாண்மை: பொங்கலூர் வேளாண்மை நிலைய பேராசிரியர்கள் விளக்கம்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வட்டாரத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலைய தோட்டக்கலை உதவிப் பேராசிரியர் க.வி.ராஜலிங்கம் மற்றும் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ந.ஆனந்தராஜா ஆகியோர் கொய்யா மரத்தில் ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் கவாத்து குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 118 ஹெக்டேர் நிலத்தில் கொய்யா பயிரிடப்பட்டுள்ளது. இதுபல்வேறு சத்துகள் நிறைந்த பழப்பயிர். தேவையான உரங்களை தக்க சமயத்தில் அளித்து கவனித்தால் நல்ல மகசூல் கிடைக்கும். ஒரு மரத்துக்கு தொழு உரம் 50 கிலோ, ஒரு கிலோ வீதம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை இட வேண்டும். அடித்தண்டில் இருந்து 1 மீட்டர் தொலைவில் ஒரு அடி அகலம் மற்றும் அரை அடி ஆழத்தில் குழி வெட்டி, மேற்கண்ட உரங்களை இட்டு மண்ணால் மூடி நீர் பாய்ச்ச வேண்டும். மகசூலை மேம்படுத்த யூரியா 1 சதவீதம், துத்தநாக சல்பேட் 0.5 சதவீதம் கலந்த கலவையை மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் மரங்களின் மேல் இலைவழி உணவாக தெளிக்க வேண்டும்.

போரான் சத்து குறைபாடு இருந்தால், பழங்கள் சில நேரங்களில் வெடித்தும், கடினமாகவும், இலைகள் சிறுத்தும் காணப்படும். இக்குறைபாட்டை தவிர்க்க 0.3 சதவீதம் போராக்ஸ் தெளிக்க வேண்டும்.

நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் இலைகள் சிறுத்தல், கணுக்களிடையே இடைவெளி குறைந்து செடிகள் குத்துச் செடிகள் போன்று தோற்றம் தருதல், இலைகள் வெளிர்தல், ஓரங்கள் தீய்ந்த தோற்றம் முதலியவை ஏற்படும். இதனை நிவர்த்தி செய்ய 25 கிராம் துத்தநாக சல்பேட், 25 கிராம் மக்னீசியம் சல்பேட், 25 கிராம் மாங்கனீஸ் சல்பேட், 12.5 கிராம் காப்பர் சல்பேட், 12.5 கிராம் பெர்ரஸ் சல்பேட் ஆகியவற்றை 5 லிட்டர் நீரில் கரைத்து, அதனுடன் ஒரு மில்லி ஒட்டும் திரவமாகியா டீப்பால் கலந்து, புதிய தளிர்கள் தோன்றும்போது ஒரு மாதம் கழித்து, பூக்கும் தருணம் மற்றும் காய் பிடிக்கும் தருணங்களில் தெளிக்க வேண்டும்.

கவாத்து

செப்டம்பர், அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் பொதுவாக கவாத்து செய்ய வேண்டும். செடிகளின் அடிப்பக்கத்தில் அவ்வப்போது தோன்றும் கிளைகளை நீக்க வேண்டும். ஒரு பருவத்தில் காய்ப்பு முடிந்தவுடன், வறண்ட மற்றும் உபயோகமில்லாத குச்சிகளை நீக்கிவிட வேண்டும். வயதான மற்றும் உற்பத்தித் திறன் இழந்த மரங்களை தரைமட்டத்தில் இருந்து 75 செ.மீ. உயரத்தில் வெட்டிவிட வேண்டும். இதிலிருந்து தழைத்து வரும் புதிய கிளைகளில் பூக்கள் தோன்றி காய்கள் உண்டாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x