Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை அரசியல் கட்சியினர் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம்: காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தகவல்

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை அனுமதி பெற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை காவல் மாவட்ட எல்லையில் வாக்குப்பதிவு சுமுகமாக நடந்து முடிந்திருக்கிறது. அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சென்னையில் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தாம்பரம் எம்.எம்.சி. ஆகிய 4 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் கடின அறைகளில் (ஸ்டிராங் ரூம்) பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய துணை ராணுவப் படையினர், 2-ம் அடுக்கில் தமிழக சிறப்பு போலீஸார், 3-ம் அடுக்கில் சென்னை போலீஸார் பணியில் உள்ளனர். இதுதவிர அனைத்து கடின அறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருக்கிறோம். அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு தொகுதிக்கு முதல் அடுக்கில் 9 துணை ராணுவப்படையினர், 2-வது அடுக்கில் தமிழ்நாடு போலீஸார் 5 பேர், 3-வது அடுக்கில் அந்த அறைகளில் எத்தனை நுழைவு வாயில் இருக்கிறது என்பதன் அடிப்படையில் சென்னை போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ‘பாஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ‘பாஸ்' மூலம் அவர்கள் எப்போது வேண்டும் என்றாலும் வந்து கடின அறையை பார்வையிடலாம். முதல் அடுக்கில் உள்ள துணை ராணுவப் படையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சியை பார்வையிடும் வசதி இருக்கிறது. வாக்கு எண்ணும் மையங்களில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியிருக்கிறோம்.

ஒரு வாக்கு எண்ணும் மையத்தில் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் இப்போது செய்திருப்பது வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய ஏற்பாடுகள். வாக்கு எண்ணும் தினத்தன்று போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும். தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, தேர்தல் தினத்தன்று 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது காவல் இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன், துணை ஆணையர் பகலவன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x