

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா தொற்றின் வீரியம் குறைந்தாலும், பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாள்தோறும் 50-க்கும் குறைவான நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திடீரென கடந்த சில வாரங்களாக தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் (மார்ச் 6-ம் தேதி) 304 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று மட்டும் 390 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 58,226 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 54,912 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,481 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 833 பேர் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் முகக்கவசம் அணியாததாலும், காய்கறி மார்க்கெட், வணிக வளாகத்தில் சமூக இடைவெளியின்றி இருப்பதாலும், கரோனா வேகமாக பரவி வருகிறது. நகர பகுதிகளில் சுகாதாரத் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிப்பதால், அவ்வப்போது மட்டுமே முகக்கவசங்களை அணிகின்றனர். இதேநிலை நீடித்தால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்
எனவே, மாவட்ட நிர்வாகம், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் நகர கிராம பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளான காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்துதல், ஆட்டோ, பேருந்துகளில் குறைவான பயணிகளை ஏற்றிச் செல்லுதல், முகக் கவசம் அணிவதை கட்டாயப்படுத்துதல், வணிக வளாகங்களில் குளிர்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.