Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

மறைந்த வே.ஆனைமுத்துவின் உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானம்

தாம்பரம்

மறைந்த பெரியாரிய அறிஞர் வே.ஆனைமுத்துவின் உடல்போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு, மருத்துவ மாணவர்கள் கல்விக்காக கொடையாக வழங்கப்பட்டது.

மார்க்சிய-பெரியாரிய பொதுவுடமைக் கட்சி நிறுவனரும் பெரியாரிய – மார்க்சிய ஆய்வாளருமான வே.ஆனைமுத்து (96) செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் காலமானார்.அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தாம்பரம் இரும்புலியூரில் வைக்கப்பட்டிருந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ராமகிருஷ்ணன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பொன்குமார், இளங்கோவன் எம்பி, தாம்பரம் தொகுதி வேட்பாளர்கள் எஸ்.ஆர்.ராஜா (திமுக), டிகேஎம். சின்னையா (அதிமுக), கரிகாலன் (அமமுக) மற்றும் பெரியார் சிந்தனையாளர்கள், அவரது கட்சியினர், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா நடிகர்கள், இயக்குநர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாலையில் அவரது உடல் வீட்டிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மருத்துவ மாணவர்களின் கல்விக்காக போரூர்ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. இதேபோல் இவரது மனைவி சுசீலாம்மாள் 2019-ம் ஆண்டு மறைந்தார். அவரின் உடலும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் தலைவர்கள் இரங்கல்

ஆனைமுத்துவின் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் : ஐயாவே.ஆனைமுத்து மறைவு அனைவருக்கும் பேரிழப்பாகும். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அவற்றை இந்தியஅரசு செயல்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிற்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடியினர் - மதச் சிறுபான்மையினர் ஆகிய அனைவரையும் ஒன்று திரட்டி அரும்பாடுபட்டு வெற்றி கண்ட பெருமைக்குரியவர். அவரின் மறைவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், அவரது இயக்கத்தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் : சமூக நீதி என்னும் சுடரின் ஒளியை இந்தியா முழுவதும் பரவச் செய்தவர்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கான அடித்தளத்தை அமைத்தவர்; தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின்அளவு 50% ஆக உயர்த்தப்பட்டதில் பெரும் பங்கு வகித்தவர் ஆனைமுத்து. சமூக நீதிக் கொள்கை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள சூழலில், அவரது மறைவு தமிழர்களுக்கு மிகப்பெரும் இழப்பு. அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x