

துபாய், சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.72 கிலோ தங்கத்தை சென்னை விமானநிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமானநிலையத்துக்கு நேற்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து இண்டிகோ விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த முகமது அனாஸ் என்பவரிடம் சோதனை நடத்தியதில், அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த சாக்ஸில் 4 கருப்பு பொட்டலங்களும், இளஞ்சிவப்பு நிறபட்டையும் இருந்தது. அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது 22 தங்கத் துண்டுகள் இருந்தன. மொத்தம் 1.28 கிலோ எடை கொண்ட அவற்றின் மதிப்பு ரூ.59.18 லட்சம்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த தங்கத் துண்டுகள் விமானத்தின் இருக்கை ஒன்றின்கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார். மேலும், அந்த விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் முன், சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மற்றொரு சம்பவம்
இதேபோல, லக்னோவில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானத்தில் வந்த ராவுத்தர் நைனா முகமது என்பவரிடம், சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது ஷூவிலிருந்து ஒரு தங்க பசை பாக்கெட் மீட்கப்பட்டது. மேலும், அவரது மலக்குடலில் இருந்து 3 தங்க பசை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றிலிருந்து 446 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது.
அதன் மதிப்பு ரூ.20.6 லட்சம். இவரிடம் நடத்திய விசாரணையில், இந்த தங்கம் விமானத்தின் இருக்கையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த விமானம் இதற்கு முன்பு துபாயிலிருந்து லக்னோ வந்ததாகவும் தெரிவித்தார்.
மொத்தம் 1.72 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.79.78 லட்சம். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.