

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த், காரில் தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அருகே ஜக்கு சின்னம் பொறித்த சிறிய பேப்பர்களை வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி கிருஷ்ணன் கோரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த், முருகன்(எ) பொடி முருகன் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட சஞ்சீவி நகரில்உள்ள வாக்குச்சாவடி அருகேவானூரைச் சேர்ந்த சக்திகுமார் (30) என்பவர் திமுக சின்னம் பொறிக்கப்பட்ட கிப்ட் கூப்பன்கள் மற்றும் ஸ்டிக்கர்களை வீசியதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மேரி உழவர்கரை நகராட்சி பழைய கட்டிடத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே என்.ஆர் காங்கிரஸ் சின்னமான ஜக்கு சின்னத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை போட்ட மேரி உழவர்கரையை சேர்ந்த வேல் முருகன் (41) என்பவர் மீது ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட ஒடைவெளி அரசு பள்ளி அருகே அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்திருந்த வாக்காளர்களிடம் பாஜகவுக்காக வாக்கு சேகரித்த அடையாளம் தெரியாத சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட மணவெளி அரசு பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்திருந்த வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.