Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

கரோனா பரவலைத் தடுக்க கூடுதல் முன்னெச்சரிக்கை தேவை; மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலைக்கு புதுச்சேரி வரவில்லை: ஆளுநர் தமிழிசை தகவல்

ரெட்டியார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த ஆளுநர் தமிழிசை.

புதுச்சேரி

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போடும்முகாமை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் கரோனாதடுப்பூசி விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஆட்டோக்களில் ஒட்டி.ஆட்டோ ஓட்டுநர்களிடம் கரோனாதடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, “கரோனா பரவல் 11 மாநிலங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. புதுச்சேரியிலும் அதன் தாக்கம் கொஞ்சம்அதிகரித்துள்ளது. ஆனால் பயப்படும்படி அதிகமாக இல்லை. அதே நேரம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு வியாழக்கிழமையும் உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும், கரோனா குறித்து சுகாதாரத்துறை செயலர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சிறப்பு ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை (இன்று) 8 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அங்கு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

புதுச்சேரியில் போதிய அளவில் தடுப்பூசிகளும், பரிசோதனை உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. முகக்கவசம் அணிவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் கரோனா சதவீதத்தை தடுக்க முடியும். ஆகையால் முகக்கவசத்தை தயவு செய்து அணியுங்கள்.

அதேபோல் தகுதியான 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். வரும் வெள்ளிக்கிழமை ஓட்டல் தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் பிரத்யேகமாக நடத்தப்படுகிறது.

அதே போல் ஆட்டோ ஓட்டுநர் களுக்கும் முகாம் நடத்தப்படுகிறது.

குறுகிய காலத்தில் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசிபோடுவது தீவிரப்படுத்தப் படும்.’’என்றார்.

அப்போது செய்தியாளர்கள், “சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் புதுச்சேரியிலும் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதா?” என்ற கேள்விக்கு, ‘‘அந்த நிலைக்கு புதுச்சேரி வரவில்லை என்பது மகிழ்ச்சி. அதே நேரம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x