

எட்டயபுரம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் உற்சாக மடைந்துள்ளனர்.
எட்டயபுரம் பகுதியில் ராபி பருவம் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 3 மாதங்களுக்கு முன், விவசாயிகள் தங்கள் மானாவாரி நிலங்களின் ஒரு பகுதியில் வெள்ளரிக்காய் பயிரிட்டனர். தற்போது, கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட வெள்ளரிக்காய்கள் அமோகமாக விளைந்துள்ளன. தினமும் பறிக்கப்பட்டு தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கோடை வெப்பத்தால் ஏற்படும் நாவறட்சியை தடுப்பதிலும், உடல் உஷ்ணத்தை குறைப்பதிலும் வெள்ளரிக்காய் உகந்தஉணவு பொருளாகும். ஆண்டுதோறும் எட்டயபுரம் வட்டத்துக்கு உட்பட்ட மாசார்பட்டி, மாவில்பட்டி, மேலக்கரந்தை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், ராபி பருவம் முடிவடைந்ததும், ஒரு பகுதி நிலத்தில் வெள்ளரிக்காய் பயிரிடுவோம். கடந்த ஆண்டு கரோனா காரணமாக ராபி விளைச்சல் அடிமாட்டு விலைக்கு தான் விற்பனையானது. வெள்ளரிக்காய் விதைத்தும், அதனை பறிக்காமல் அப்படியே விட்டது தான் மிச்சம்.
ஆனால், இந்தாண்டு கடந்த ஜனவரி இறுதியில் வெள்ளரிக்காய் பயிரிட்டோம். சிலர் கடைகளில் விதைகளை வாங்கினர். பெரும்பாலான விவசாயிகள் வெள்ளரி பழத்தில் இருந்து விதைகளை எடுத்து, உலர வைத்து தயார் செய்துவிடுவது வழக்கம். ஜனவரியில் பயிரிட்டோம். இதற்கென அதிகளவு தண்ணீர் தேவையில்லை. ஜனவரி மாதம் முழுவதும் பெய்த மழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தது. அதே போல், உரங்கள் பயன்பாடும் கிடையாது. விதைப்புடன் அவ்வப்போது கண்காணித்து மட்டும் வந்தோம். தற்போது வெள்ளரிக்காய் விளைச்சல் பெரிதும் கைக்கொடுத்துள்ளது.
அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்கியிருந்தாலும், அடுத்து வரும் பருவத்துக்கு நாங்கள் தயாராவதற்கு வெள்ளரிக்காய் விளைச்சல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. சாத்தூருக்கு அடுத்தபடியாக எட்டயபுரம் வட்டத்தில் தான் வெள்ளரிக்காய் அதிகம் பயிரிடப்படுகிறது. தற்போது மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருவது மகிழ்ச்சியை தருகிறது என்றனர்.