மத்திய மண்டலத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும் 5 தொகுதிகளில் மட்டும் கூடுதல் வாக்குப்பதிவு

மத்திய மண்டலத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும் 5 தொகுதிகளில் மட்டும் கூடுதல் வாக்குப்பதிவு
Updated on
1 min read

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள 41 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே கூடுதலாக வாக்குகள் பதிவாகி உள்ளன.

திருச்சி மத்திய மண்டலத்தில் திருச்சி (9), தஞ்சாவூர் (8), திருவாரூர் (4), நாகப்பட்டினம் (6), புதுக்கோட்டை (6), கரூர் (4), பெரம்பலூர் (2), அரியலூர் (2) ஆகிய 8 மாவட்டங்களில் மொத்தம் 41 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இவற்றில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 76.08 சதவீதமும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 76.42 சதவீதமும், திருவாரூர் மாவட்டத்தில் 78.03 சதவீதமும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 76.40 சதவீதமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 77.18 சதவீதமும், கரூர் மாவட்டத்தில் 83.44 சதவீதமும், பெரம்பலூர் மாவட்டத்தில் 79.54 சதவீதமும், அரியலூர் மாவட்டத்தில் 83.78 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 73.56 சதவீதமும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 74.12 சதவீதமும், திருவாரூர் மாவட்டத்தில் 76.53 சதவீதமும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 75.47 சதவீதமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 76.40 சதவீதமும், கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதமும், பெரம்பலூர் மாவட்டத்தில் 79.09 சதவீதமும், அரியலூர் மாவட்டத்தில் 82.32 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒப்பிடுகையில் கரூர் மாவட்டத்தில் 0.48 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவாகியுள்ளது.

மத்திய மண்டலத்தில் உள்ள 41 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நன்னிலம், வேதாரண்யம், விராலிமலை, குன்னம், கரூர் ஆகிய 5 தொகுதிகளில் மட்டுமே 2016-ம் ஆண்டு தேர்தலை விட தற்போது நடந்து முடிந்த தேர்தலில் கூடுதலாக வாக்குகள் பதிவாகி உள்ளன.

அதன்படி, தற்போது கரூரில் 3.89 சதவீதமும் (2016-ல் 79.65, தற்போது 83.54), வேதாரண்யத்தில் 3.12 சதவீதமும் (2016-ல் 77.48, தற்போது 80.60), நன்னிலத்தில் 1.82 சதவீதமும்(2016-ல் 80.18, தற்போது 82), விராலிமலையில் 1.42 சதவீதமும் (2016-ல் 84.01, தற்போது 85.43), குன்னத்தில் 0.37 சதவீதமும்(2016-ல் 79.69, தற்போது 80.06) கூடுதலாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

3% மேல் குறைந்த வாக்குகள்

2016 சட்டப்பேரவைத் தேர்தலை விட கும்பகோணம் தொகுதியில் 4.77 சதவீதமும், திருவாரூரில் 4.09 சதவீதமும், கீழ்வேளூர் தொகுதியில் 3.95 சதவீதமும், தஞ்சாவூர் தொகுதியில் 3.66 சதவீதமும், முசிறி தொகுதியில் 3.62 சதவீதமும், துறையூர் தொகுதியில் 3.41 சதவீதமும், திருவையாறு தொகுதியில் 3.20 சதவீதமும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in