

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்துக்கு அதிகாலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வந்த கண்டெய்னர் லாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடியில் உள்ள வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கும் பணிகள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் 5 கண்டெய்னர் லாரிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தன. இந்த கண்டெய்னர் லாரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தன. இதனைப்பார்த்த திமுகவினர் சந்தேகமடைந்து கேள்வி எழுப்பி உள்ளனர்.
`அப்போது, இந்த கண்டெய்னர் லாரிகளில் இருப்பவை பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்காக கூடுதலாக வைக்கப்பட்டு பயன்படுத்தப்படாதவை’ என அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். இருப்பினும் திருப்தியடையாத திமுகவினர் கண்டெய்னர் லாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் திமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விளக்கம் அளித்தார். இந்த இயந்திரங்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்படும் எனஆட்சியர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திமுகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.