

கல்லூரிப் பேராசிரியையை கத்தியால் குத்தி நகைகளை பறிக்க முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வேலூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ் வரி (54). கல்லூரி பேராசிரியை. இவர், கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது வீட்டில் இருந்த போது, ஆற்காடு அடுத்த கீழ் விஷாரத்தைச் சேர்ந்த நாகூர் மீரான் (36) என்பவர் புவனேஸ்வரி வீட்டுக்குள் நுழைந்து புவனேஸ்வரியை கத்தியால் குத்திவிட்டு அவர் அணிந்திருந்த ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 6 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த புவனேஸ்வரி வாலாஜா தலைமை அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புவனேஸ்வரி அளித்த புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நாகூர் மீரானை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதி விசாரணை நடைபெற்றது.
இதில், நாகூர் மீரான் மீது பதியப்பட்ட குற்ற வழக்கு நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி நாகூர் மீரானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பாலசுப்பிரமணியன் நேற்று தீர்ப்பளித்தார்.
இதையடுத்து நாகூர் மீரான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.