Last Updated : 07 Apr, 2021 09:45 PM

 

Published : 07 Apr 2021 09:45 PM
Last Updated : 07 Apr 2021 09:45 PM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகமாக வாக்களித்துள்ள பெண்கள்: வேட்பாளர்களின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தியாகினர்

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக வாக்குப்பதிவு செய்து அரசியல் கட்சியினரின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது. 234 தொகுதிகளில் ஒரு சில தொகுதிகளை தவிர்த்து பெரும்பாலான தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே தங்களது வாக்குகளை அதிகமாகப் பதிவு செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி. குப்பம் (தனி), குடியாத்தம்(தனி) ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

இதில், காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 567 வாக்காளர்கள் உள்ளனர். காட்பாடி தொகுதியில் 90,142 ஆண் வாக்காளர்களும், 93, 768 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 930 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் காட்பாடி தொகுதியில் சராசரியாக 74 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 49 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 87,218 ஆண் வாக்காளர்களும், 90,547 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 769 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் வேலூர் தொகுதியில் சராசரியாக 70.25 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அதேபோல, அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 95,085 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து ஆயிரத்து 57 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் என மொத்தம் 1 லட்சத்து 96 ஆயிரத்து 146 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அணைக்கட்டு தொகுதியில் சராசரியாக 77.05 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

கே.வி. குப்பம்(தனி) சட்டப்பேரவை தொகுதியில், 2 லட்சத்து 25 ஆயிரத்து 277 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 84,670 ஆண் வாக்காளர்களும், 87,672 பெண் வாக்காளர்களும்,மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 343 வாக்காளர்கள் தங்களது வாக்குகள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் இத்தொகுதியில் சராசரியாக 76.50 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

குடியாத்தம்(தனி) தொகுதியில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 677 வாக்காளர்கள் உள்ளனர். அதில்,1 லட்சத்து 2 ஆயிரத்து 989 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 7 ஆயிரத்து 184 பெண் வாக்காளர்களும், 14 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 187 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் குடியாத்தம் தொகுதியில் சராசரியாக 72.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த 5 தொகுதிகள் மூலம் வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 71 ஆயிரத்து 132 வாக்காளர்களில், 4 லட்சத்து 60 ஆயிரத்து 104 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 228 பெண் வாக்காளர்களும், 43 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9 லட்சத்து 40 ஆயிரத்து 375 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் 73.98 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள ஆண்கள் 6 லட்சத்து 16 ஆயிரத்து 28 பேரில், 4 லட்சத்து 60 ஆயிரத்து 104 பேர் வாக்களித்துள்ளனர்.

பெண்கள் 6 லட்சத்து 54 ஆயிரத்து 960 பேர் உள்ளனர். இதில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 228 பேர் வாக்களித்துள்ளனர். ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகளவு வாக்கு அளித்துள்ளதால் 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக பெண்கள் மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டை மாவட்டம்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் (தனி), சோளிங்கர், ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை என 4 தொகுதிகள் உள்ளன. இதில், அரக்கோணம் தொகுதியில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 082 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 84,941 ஆண்களும், 85,103 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் என மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 54 பேர் வாக்களித்துள்ளனர். சோளிங்கர் தொகுதியில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 440 வாக்காளர்கள் உள்ளனர்.

அதில், 1 லட்சத்து 11 ஆயிரத்து 453 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 740 பெண்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 194 பேர் வாக்களித்துள்ளனர்.

ராணிப்பேட்டை தொகுதியில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 481 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 1 லட்சத்து ஆயிரத்து 239 ஆண்களும், 1 லட்சத்து 4 ஆயிரத்து 577 பெண்களும், 6 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 822 பேர் வாக்களித்துள்ளனர். ஆற்காடு தொகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 785 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 1 லட்சத்து 2 ஆயிரத்து 873 ஆண்களும், 1 லட்சத்து 4 ஆயிரத்து 754 பெண்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 628 பேர் வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் 4 தொகுதிகளில் 4 லட்சத்து 506 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 5 ஆயிரத்து 174 பெண் வாக்காளர்களும் 18 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 8 லட்சத்து 5 ஆயிரத்து 698 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 4 தொகுதிகளில் சராசரியாக 78.09 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தை பொறுத்த வரை 4 தொகுதிகளில் சோளிங்கர் தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்களார்களே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்துள்ளதால் அந்த மாவட்டத்திலும் வெற்றி தோல்வியை பெண்களே நிர்ணயிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x