Last Updated : 07 Apr, 2021 09:25 PM

 

Published : 07 Apr 2021 09:25 PM
Last Updated : 07 Apr 2021 09:25 PM

கோவையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறைகளுக்கு சீல்: 3 அடுக்கு பாதுகாப்பு

கோவை

கோவையில் வாக்கு எண்ணிக்கை மையமான, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. தேர்தலுக்காக, மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தலுக்கு 6,885 பேலட் யூனிட் இயந்திரங்கள், 5,316 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 5,894 வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

நேற்றிரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், அந்தந்த வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், பிரத்யேக பெட்டியில் போடப்பட்டு, தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் அந்த பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையமாக தடாகம் சாலையில் உள்ள, அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி செயல்படுகிறது. சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகள் 395 லாரிகளில் ஏற்றப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கைக்கு கொண்டு வரும் பணிகள் நடந்தன. கோவை தெற்கு, வடக்குத் தொகுதிகளுக்கான இயந்திரங்கள் விரைவாக வந்து விட்டன. தொலைதூரத்தில் இருந்ததால், மேட்டுப்பாளையம், வால்பாறை தொகுதிகளில் இருந்து இயந்திரங்கள் தாமதமாக வந்தன. நேற்று இரவு முதல் இன்று காலை வரை தேர்தல் பிரிவு ஊழியர்கள், லாரிகளில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டியை எடுத்து, அதற்காக தொகுதி வாரியாக ஏற்படுத்தப்பட்டு இருந்த பிரத்யேக காப்பு அறைகளில் (ஸ்டாரங் ரூம்) எடுத்து வைத்தனர்.

தினமும் சோதனை

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது,‘‘ வழக்கமாக தரையில் நீள வரிசையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடுக்கப்படும். கரோனா அச்சம் காரணமாக, நடப்புத் தேர்தலில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், இடப் பற்றாக்குறையை சமாளிக்க, உயர வரிசையில் ரேக் தயாரிக்கப்பட்டு, அதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டன. ஒரு உயர வரிசையில் 3 இயந்திரங்கள் வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக அடுக்கிய பின்னர், அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களின் காப்பு அறைகளுக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் தினமும் காலை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்ல வேண்டும். அங்கு தங்களது தொகுதிக்குட்பட்ட காப்பு அறைகளின் பூட்டு, சீல் ஆகியவற்றை ஆய்வு செய்து, குறிப்பெடுத்து, புகைப்படத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு தினமும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்கள் (ஒரு வேட்பாளருக்கு, ஒரு முகவர்) தினமும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் காப்பறை அருகே செல்லக் கூடாது. கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று கண்காணிக்கலாம்,’’ என்றனர்.

துணைராணுவம், போலீஸ் பாதுகாப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் இ்ன்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்தனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காப்பு அறைகளின் முன்பு துணை ராணுவத்தினரும், மற்ற பகுதிகளில் காவல்துறையினரும் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவத்தினர், காவல்துறையினர் என 310 பேர் 3 ஷிப்ட் முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் 137 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கு மினி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, காவல்துறையினரால் மெகா திரை மூலம் சிசிடிவி காட்சிகள் கண்காணிக்கப்படுகின்றன. தவிர, அக்காட்சிகள் தொடர்ந்து பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் பிரிவு, காவல்துறை தவிர, வெளியாட்கள் உள்ளே நுழைய அனுமதியில்லை. சிசிடிவி கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்க வேண்டியுள்ளதால், தடையற்ற மின்சாரம் வழங்கவும் மின்வாரியத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x