

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்களுக்கும், செயல்வீரர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஏப். 07) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று (ஏப். 06) அமைதியாக நடந்து முடிந்தது.
மத்திய அரசின் அதிகாரத்தில் இருந்து வரும் பாஜகவும், அதன் அதிகார அரசியலுக்கு அடிபணிந்துவிட்ட அதிமுகவின் சுயநல கும்பலும் தமிழகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் முற்போக்கு வளர்ச்சியைத் தடுத்து சிதைத்துவிட்டன.
பழக்க வழக்கங்களிலும், உண்ணும் உணவிலும், உடுத்தும் உடையிலும் பல்வகை கலாச்சாரத்தைப் பின்பற்றி சகோதர உறவோடு வாழும் தமிழக மக்கள் மாநில உரிமை காக்கும் ஒற்றுமை உணர்வோடு பேணி வரும் சமூக நல்லிணக்கத்திற்குப் பெரும் கேடு செய்துள்ளனர்.
நாட்டை மதவெறிப் படுகுழியில் தள்ளிவிடும் பிற்போக்கு சக்திகளுடன் சாதிவெறி சக்திகளும் சேர்ந்துகொண்டன. இந்த தீய சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி உருவானது.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் பேராதரவு வழங்கி மாபெரும் வெற்றி பெறச் செய்தனர். தொடர்ந்து மக்களின் ஆதரவு பெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மேலும் வலிமை பெற்று சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி உடன்பாடு கண்டு களத்தில் இறங்கியது.
திமுக தலைமையிலான இந்தக் கூட்டணிக்குப் பெருகிவரும் பேராதரவைத் தடுக்கும் அரசியல் சதி வேலைகளில் மதவெறி, சாதிவெறி, சுயநல கும்பல், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை ஏற்ற திமுகவின் மீதும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் பகையுணர்வு பிரச்சாரம் மேற்கொண்டன.
மத்திய அரசின் அதிகாரத்தில் இருக்கும் பாஜக, வருமான வரித்துறையைத் தவறாகப் பயன்படுத்தி இழிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்தக் கூட்டணிக் கட்சியினர் கோடிக்கணக்கான ரூபாயை அள்ளி இறைத்து ஊடகங்களின் விளம்பரங்கள் மூலம் தவறான கருத்துகளை 'உண்மை' போல் சித்தரிக்கும் மலிவான செயலில் ஈடுபட்டனர்.
இவை அனைத்தையும் எதிர்கொண்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் தயாரிப்புகளிலும், பிரச்சாரத்திலும் ஈடு இணையற்ற பணிகளை மேற்கொண்டார். தமிழக மக்களின் உணர்வைப் பிரதிபலித்த முழு நிறைவான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டது. இந்தத் தேர்தல் அறிக்கை தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்று முன்னேறியது.
கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கி.வீரமணி (திராவிடர் கழகம்), ராகுல் காந்தி, கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), தோழர்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, தொல். திருமாவளவன் (விசிக), இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளூர் மட்டத் தலைவர்கள், பல்லாயிரம் ஊழியர்கள் மற்றும் செயல் வீரர்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்குச் சோர்விலாது பணியாற்றியதற்கும், தேர்தலில் பங்கேற்று வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு இதயபூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.