Last Updated : 07 Apr, 2021 06:45 PM

 

Published : 07 Apr 2021 06:45 PM
Last Updated : 07 Apr 2021 06:45 PM

சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

மதுரை

மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோ் கடந்தாண்டு ஜூன் மாதம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இது தொடர்பாக இருவரையும் விசாரணையின் போது அடித்து கொலை செய்ததாக சிபிஐ போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், சிறப்பு சார்பு ஆய்வாளர், காவலர்கள் என 9 பேரை கைது செய்தனர். இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

என் மீதான இரட்டைக் கொலை வழக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த ஆவணங்களின் நகல் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சிபிஐ ஆவணங்களின் நகல் வழங்கப்பட்டால் மட்டுமே என்னால் என்னால் வழக்கை நடத்த முடியும். எனக்கு எதிராக பொய் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் என் மீது தவறான குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை நீக்கக்கோரியும் மனு தாக்கல் செய்தேன். அந்த மனுவும் தள்ளுபடியாகிவிட்டது.

எனவே, வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டும், பொய் சாட்சியம் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை நீக்கக்கோரி நான் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கு ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சக்திகுமார் சுகுமார் குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், சிபிஐ தரப்பின் ஆவணங்கள் இல்லாமல் வழக்கை எதிர்கொள்ள முடியவில்லை.

மதுரை நீதிமன்றத்தில் சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட வேண்டும் என்றார்.

அதற்கு நீதிபதி, மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட அவசியமில்லை. சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x