Published : 07 Apr 2021 07:21 PM
Last Updated : 07 Apr 2021 07:21 PM

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு: மாவட்டத் தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு

மாவட்டத் தேர்தல் அலுவலரும், நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி.நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் \ மயிலாடுதுறை

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்படுவதை மாவட்டத் தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,861 வாக்குச்சாவடிகளில் நேற்று (ஏப். 06) வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் மண்டல அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரி, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி ஆகிய வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து வந்தனர்.

இன்று (ஏப்.07) காலை அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வந்து சேர்ந்தவுடன், பாதுகாப்பு அறைக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, முகவர்கள் முன்னிலையில் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஒரு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்படுவதை மாவட்டத் தேர்தல் அலுவலரும், நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி.நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி மற்றும் முகவர்கள் உடனிருந்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரி, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி ஆகிய கல்லூரி வளாகங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல் அடுக்கில் உள்ளூர் போலீஸாரும், 2-வது அடுக்கில் ஆயுதப்படைப் பிரிவு போலீஸாரும், 3-வது அடுக்கில் துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைத் தவிர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை முன் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸார் 8 மணி நேரத்திற்கு ஒரு குழு என, 24 மணி நேரமும் 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் அறை முன்பும் கேமரா பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது.

இதைத் தவிர வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளே வரும் முகவர்கள், அதிகாரிகள் 'மெட்டல் டிடெக்டர்' கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், அங்குள்ள பதிவேட்டில் தங்களது பெயர் உள்ளிட்ட முழு விவரங்களைப் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீ விபத்து மற்றும் மின்சாரக் கசிவு ஆகியவை ஏற்படாமல் இருக்க தீயணைப்புத் துறையினர், மின்சாரத் துறையினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x