புதுச்சேரி, காரைக்கால் உட்பட 4 பிராந்தியங்களில் வாக்குகளை எண்ண 6 மையங்கள்: கரோனாவால் ஒவ்வோர் அறையிலும் 7 எண்ணும் மேசைகள்

புதுச்சேரி, காரைக்கால் உட்பட 4 பிராந்தியங்களில் வாக்குகளை எண்ண 6 மையங்கள்: கரோனாவால் ஒவ்வோர் அறையிலும் 7 எண்ணும் மேசைகள்
Updated on
1 min read

புதுச்சேரி, காரைக்கால் உட்பட 4 பிராந்தியங்களில் வாக்குகளை எண்ண 6 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஒவ்வோர் அறையிலும் 7 எண்ணும் மேசைகள் அமைக்கப்படுகின்றன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரியில் 23 தொகுதிகள், காரைக்காலில் 5 தொகுதிகள், மாஹே, ஏனாமில் தலா ஒரு தொகுதி என 30 தொகுதிகள் உள்ளன. வாக்கு இயந்திரங்கள் ஆறு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மண்ணாடிபேட்டை, திருபுவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி ஆகிய 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

தாகூர் கலைக்கல்லூரியில் காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலாபேட்டை, முத்தியால்பேட்டை, ராஜ்பவன் ஆகிய ஐந்து தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி டிஆர்.பட்டிணம், நெடுங்காடு, திருநள்ளாறு ஆகிய ஐந்து தொகுதிகளில் பதிவான வாக்குகளும், மாஹேவில் ஜவர்ஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாஹே தொகுதி வாக்குகளும், ஏனாம் வாக்குகள் அங்குள்ள சிவில் மையத்திலும் எண்ணப்படும்.

இதுகுறித்துத் தேர்தல்துறை வட்டாரங்களில், கரோனாவையொட்டி ஒவ்வொரு அறையிலும் 7 எண்ணும் மேசைகள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in