Published : 07 Apr 2021 05:47 PM
Last Updated : 07 Apr 2021 05:47 PM
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்திய பேப்பர் சீல் ஒன்று, வாக்கு எண்ணும் மையத்தில் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளைச் சேர்ந்த 1,902 வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரிக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டன. பின்னர், மாவட்டத் தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் ஒவ்வொன்றாக இன்று (ஏப்.7) சீல் வைக்கப்பட்டன.
அப்போது, விராலிமலை தொகுதி மாத்தூர் பகுதியில் உள்ள 27-வது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட முகவர்களின் கையெழுத்துகளுடன் கூடிய பேப்பர் சீல் ஒன்று வாக்கு எண்ணும் மையத்தில் கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திமுக, அமமுக வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகித்தனர். மேலும், இது தொடர்பாக மாவட்டத் தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரியிடம் புகார் தெரிவித்தனர்.
பின்னர், இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தோருக்கு மாவட்டத் தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.ரகு, மாவட்டத் தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி, விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.எஸ்.தண்டாயுதபாணி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
அப்போது, ''வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக வாக்குச்சாவடியில் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நத்தப்படும். அப்போது, விவிபேட் கருவியில் இருந்து சேகரிக்கப்படும் வாக்குச்சீட்டுகளை ஒரு கவருக்குள் வைத்து, அதன் மீது முகவர்கள் கையெழுத்துகளுடன் கூடிய பேப்பர் சுற்றப்பட்டு சீல் வைக்கப்படும். அந்த பேப்பர் சீல்தான் தவறுதலாக இங்கு கிடந்துள்ளது. இதற்கும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை'' என விளக்கம் அளித்தனர். எனினும், இந்த விளக்கத்தை திமுக, அமமுக கட்சியினர் ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து, வாக்கு எண்ணும் மையத்தில் விராலிமலை தொகுதிக்கான பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு, அங்கிருந்த 27-வது வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல் பிரிக்காமல் இருப்பதை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆட்சேபனை தெரிவித்தவர்கள் சமாதானம் அடைந்தனர்.
பின்னர், வாக்கு எண்ணுவதற்கு முன்னதாகவே அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக இருந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனத் திமுகவினர் கோரிக்கை தெரிவித்தனர்.
அனைத்துக் கோரிக்கைகள் குறித்தும் தேர்தல் ஆணையர்களுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிட்ட தொகுதி விராலிமலை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT