Published : 07 Apr 2021 05:18 PM
Last Updated : 07 Apr 2021 05:18 PM

தருமபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 300 வீரர்கள் மூலம் மூன்றடுக்குப் பாதுகாப்பு

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு வந்து சேர்ந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டன.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் என, மொத்தம் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் நேற்று (ஏப். 6) தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

5 தொகுதிகளுக்கும் சேர்த்து 870 இடங்களில் 1,817 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் நேற்று இரவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தருமபுரி அடுத்த செட்டிக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரவு 9 மணிக்கு வந்து சேரத் தொடங்கியது. அருகிலுள்ள வாக்குச்சாவடி மைய இயந்திரங்கள் விரைவில் வந்தபோதும், மாவட்டத்தின் எல்லைப்பகுதி வாக்குச்சாவடிகளில் இருந்தும், மலை கிராமங்களில் இருந்தும் எடுத்து வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (ஏப்.7) காலை வரை வந்து கொண்டிருந்தன.

ஒவ்வொரு தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக வந்து சேர்ந்ததும், அவை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கார்த்திகா மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் தினேஷ் சிங், கமால் ஜஹான் லாக்ரா, பங்கஜ் ஆகியோர் முன்னிலையில், உரிய அலுவலர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டது. பின்னர், ஒவ்வொரு தொகுதிக்குமான 'ஸ்ட்ராங் ரூம்' என்று அழைக்கப்படும் பாதுகாப்பு அறையில் வைத்துப் பூட்டப்பட்டது. பிறகு அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

5 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்துக்குத் துணை ராணுவப் படை, காவல்துறையினர் 300 பேர் அடங்கிய குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிரப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். மூன்றடுக்கு முறையில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x