

கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த லட்சக்கணக்கான வாக்காளர்கள் திரும்பிச் செல்லப் போதிய அளவு பேருந்துகள் இன்றி திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உட்பட அம்மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்களுக்கான வாக்குரிமையைத் தமிழ்நாட்டிலேயே வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று (6-ம் தேதி) நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களுடைய சொந்த ஊர்களில் வாக்களிக்க விடுமுறையில் தமிழகம் வந்திருந்தனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த மறுநாள் கிளம்பிச் செல்லப் பேருந்து நிலையம் வந்தனர். ஆனால், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். இது தமிழகப் பயணிகளை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியது.
ஓசூர் - பெங்களூரு, ஓசூர் - கோலார், ஓசூர் - தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான கர்நாடகா அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஓசூர் பெங்களூரு இடையே பணி, கல்வி, மருத்துவம் நிமித்தம் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
ஓசூர் பேருந்து நிலையம், கர்நாடகப் பேருந்துகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. ஓசூர் - பெங்களூரு வழித்தடத்தில் தமிழக அரசுப் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டன.