Published : 07 Apr 2021 14:15 pm

Updated : 07 Apr 2021 21:47 pm

 

Published : 07 Apr 2021 02:15 PM
Last Updated : 07 Apr 2021 09:47 PM

வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாள் வரை நமக்குப் பொறுப்பும் கடமையும் உள்ளது: ஸ்டாலின் 

we-have-a-responsibility-and-a-duty-until-the-day-the-victory-is-officially-declared-stalin

சென்னை

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடைபெற்ற ஜனநாயகத் தேர்தல் திருவிழாவில் பேரார்வத்துடன் பங்கேற்று வாக்களித்த வாக்காளர்களுக்கும் - இப்பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறையினர் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் - பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:


“தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தின் தன்மை உணர்ந்து மிகுந்த பொறுப்புடனும் - ஒருங்கிணைப்புடனும் அயராமல் களப்பணியாற்றிய திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தோழர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக - பாஜக அரசுகளின் அதிகார துஷ்பிரயோகம் - அடக்குமுறை - ஒரு சில காவல்துறையினரின் பாரபட்சமான நடவடிக்கை ஆகியவற்றைச் சமாளித்து - கரோனா தொற்றுக்கிடையில் திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் ஆற்றிய பணிகள் பாராட்டுதலுக்குரியவை.

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடைபெற்ற ஜனநாயகத் தேர்தல் திருவிழாவில் பேரார்வத்துடன் பங்கேற்று வாக்களித்த வாக்காளர்களுக்கும் - இப்பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறையினர் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் - பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“ஆவடி, விருதுநகர், திருவையாறு, நாகர்கோவில் வாக்குச் சாவடிகளில் உதயசூரியனுக்கு அளித்த வாக்கு தாமரை உள்ளிட்ட வேறு சின்னங்களுக்கு விழுந்தது”, “மதுரவாயல் வாக்குச்சாவடி அருகில் பொதுமக்களைப் பார்த்து சாதியைக் குறிப்பிட்டு அமைச்சர் பெஞ்சமின் மிரட்டல்”, “தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள்”, “வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது”, "ஒட்டன்சத்திரம் மற்றும் மானாமதுரை தொகுதிகளில் அத்துமீறல்கள்" உள்ளிட்ட பல்வேறு கடுமையான புகார்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்தாலும் - இந்த அதிகார துஷ்பிரயோகத்தையும், அராஜகத்தையும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும், தோழர்களும் துணிச்சலுடன் எதிர்கொண்டு இந்தத் தேர்தல் களத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருப்பது, ஜனநாயகத்தில் நம் கூட்டணிக் கட்சியினர் வைத்துள்ள நம்பிக்கைக்குப் பொருத்தப்பாடாக இருக்கிறது.

தமிழக மக்களுக்கு ஒரு சிறு இடைஞ்சலும் ஏற்பட்டு விடாதபடி - அமைதியான தேர்தலுக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆற்றிய தேர்தல் பணிகள் மெச்சத்தக்கவை. வாக்குப்பதிவு நிறைவடைந்து - தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் - நான் நேற்றைய தினம் வேண்டுகோள் விடுத்ததுபோல் இனிதான் நமக்கு மிக முக்கியத் தேர்தல் பணி இருக்கிறது.

இரட்டிப்புப் பொறுப்பும் நம் தலைக்கு மேல் இருக்கிறது. ஆகவே, திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் மே 2ஆம் தேதி வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களைக் கவனமாகப் பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அந்த மையங்களில் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள், அங்கு பணியிலிருப்போர் தவிர வெளியாட்களின் நடமாட்டங்கள், யாரேனும் அத்துமீறி அந்த மையங்களுக்குள் நுழைகிறார்களா என்பது பற்றி எல்லாம் தொடர்ச்சியாகக் கண்காணித்திட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் “டர்ன் டியூட்டி” அடிப்படையில் தங்களுக்குள் ஒதுக்கீடு செய்து கொண்டு, கழகத்தினரும், கூட்டணிக் கட்சியினரும் இரவு பகலாக, தொய்வின்றி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மின்னணு வாக்குப் பதிவு மையங்களில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் நடந்தால் உடனடியாக கட்சித் தலைமைக்குத் தெரிவித்திடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாள்வரை, நமக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கிறது”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!


We have a responsibilityDuty until the dayVictory is officially declaredStalinவெற்றிஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் நாள்வரைநமக்கு பொறுப்பும் கடமையும் உள்ளதுஸ்டாலின்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x