

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் முதல் முறையாக 12 மணி நேரமும், முதன்முறையாக கரோனா நோயாளிகளுக்காகக் கவச உடையுடன் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்ட தேர்தலும் இதுதான். சில மாவட்டங்களில் மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாவிட்டாலும் 70 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடந்தது.
இதில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணைய இறுதி நிலவரம் நேற்றிரவு 8 மணிக்கு வெளியானது. ஆனாலும் முழுமையான வாக்குப்பதிவு நடைமுறைகள் முடிந்தப்பின்னரே இறுதி நிலவரம் நள்ளிரவு அல்லது நாளை காலை வெளியாகும் என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இன்று காலையில் முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டது. இதில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சதவீதம் தனித்தனியாக வெளியாகியுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் 72.78 சதவீதம் பதிவானதாக அதிகாரபூர்வமான தகவலாக வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்தப்பட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதமும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் பதிவான வாக்குகள் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியான பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.