

வாக்குப் பதிவு தினத்தன்று தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி மீது குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் உள்ளார். இவர் வாக்களித்த பின்னர், தொண்டாமுத்தூர் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு நேற்று சென்று, அங்கு நடக்கும் வாக்குப் பதிவுகளைப் பார்வையிட்டார். குனியமுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று வாக்குப் பதிவுகளைப் பார்வையிட்டார். அப்போது எஸ்.பி.வேலுமணி தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாகத் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலர் ராஜா முகமது என்பவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதில், அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் குனியமுத்தூர் அரசுப் பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு, கட்சிக் கொடி கட்டப்பட்ட காரில் வந்தார்.
அதேபோல், வாக்குச் சாவடிக்குள் கட்சித் துண்டினை கழுத்தில் அணிந்துகொண்டு வந்தார். தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்ட வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டு இருந்தது.
அதன் பேரில், குனியமுத்தூர் காவல்துறையினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.