வாக்களிக்க சொந்த ஊர் வந்தவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப பேருந்து வசதி இல்லாததால் ஆம்பூரில் சாலை மறியல்

பேருந்து வசதி இல்லாததால் ஆம்பூர் பேருந்துநிலையம் அருகே காத்திருந்த பயணிகள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து வசதி இல்லாததால் ஆம்பூர் பேருந்துநிலையம் அருகே காத்திருந்த பயணிகள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
2 min read

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் வந்தவர்கள் ஆம்பூரிலிருந்து வெளியூருக்குச் செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகினர். அதேநேரத்தில், அதிகக் கட்டணம் செலுத்தி கார், வேன், லாரிகளில் பயணம் செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெளியூரில் வசித்து வந்த வாக்காளர்கள் கடந்த 2 நாட்களாகத் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வந்தனர். அதேபோல வெளியூர்களில் பணி செய்து வந்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் ஆம்பூருக்கு வந்தனர். 100 சதவீதம் வாக்களிக்க ஏதுவாக நேற்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

நேற்று நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்காளர்கள் மீண்டும் வெளியூர் செல்ல ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.ஆனால், போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் நேற்று மாலையில் இருந்து பயணிகள் பேருந்து நிலையத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரமாய்க் காத்திருந்தனர்.

திருப்பத்தூர், வாணியம்பாடி, சேலம், தருமபுரி, கோவை, கிருஷ்ணகிரி, ஒசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு செல்லும் மார்க்கத்தில் பேருந்து நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆயிரக்கணக்கான பயணிகள் நீண்ட நேரமாகக் காத்திருந்த போதிலும் போதிய பேருந்துகள் வராததால் நேரம் அதிகரிக்க அதிகரிக்க பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

வந்த ஒரு சில பேருந்துகளில் ஏற்கெனவே பயணிகள் இருந்ததால் ஆம்பூரில் காத்திருந்த பயணிகளால் அந்த பேருந்துகளில் ஏற முடியவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பெரும்பாலான பயணிகள் தங்களுடைய குழந்தைகளுடன் காத்திருந்தால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஆம்பூர் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பேருந்துகள் இல்லாததால் வேலூர், சென்னையிலிருந்து வரும் பேருந்துகளை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவற்றிலும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்து நிலையம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் ஆம்பூர் நகரக் காவல் நிலைய ஆய்வாளர் திருமால் பேருந்து நிலையம் வந்து, பயணிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக வந்த பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல ஏற்பாடு செய்தார்.

மேலும் ஆம்பூர் போக்குவரத்து கழகப் பணிமனை மேலாளரைத் தொடர்பு கொண்டு கூடுதலாகப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து பயணிகள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இருந்தபோதிலும் போதிய பேருந்துகள் வரவில்லை என்பதால் ஒரு சில பயணிகள் தனியார் கார், வேன் உரிமையாளர்கள் பேருந்து நிலையம் வந்து பயணிகளை ஏற்றிச் சென்றனர்.

ஆம்பூரில் இருந்து ஒசூர் செல்ல ஒரு நபருக்கு ரூ.400-ம், லாரிகளில் பெங்களூரு செல்ல 4 நபர்களுக்கு ரூ.4,500 வாங்கிக் கொண்டு லாரிகளில் பயணிகளை ஏற்றிச் சென்றனர். காரில் ஒசூர் செல்ல ஒரு நபருக்கு ரூ.500 என வாகன ஓட்டுநர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். அவசரமாகச் செல்ல வேண்டும் என்பாதாலும், பணிக்குச் செல்ல வேண்டியிருந்ததாலும் பயணிகளும் வேறு வழியில்லாமல் அதிக கட்டணத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் கார், வேன், லாரிகளில் பயணித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in