கரோனா பரவல்; நம்முடைய உயிர்களை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

அனைவரும் கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப். 07) வெளியிட்ட அறிக்கை:

"கரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வீச தொடங்கி இருக்கிறது. தமிழகம் கரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக செயல்படுகிறது. அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறையின் சீரிய முயற்சியால் பல உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரமாக கரோனா தொற்று படிப்படியாக, மாவட்ட ரீதியாக தமிழகத்தில் பரவ தொடங்கி உள்ளது. இறப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அதுவும் தவிர்க்கப்பட வேண்டும். தமிழக அரசு மீண்டும் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை அனைத்து தரப்பு வசதிகளையும் செய்ய தொடங்கி இருக்கிறது.

கரோனாவின் கொடூரமான தாக்கத்தை ஏற்கெனவே அறிந்த தமிழக மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழக அரசும் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்துறை, காவல்துறை மற்றும் அதிகாரிகளோடு ஒத்துழைப்பு கொடுத்து, அஜாக்கிரதையை குறைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அரசின் கோட்பாடுகளை கவனமாகவும், கண்டிப்பாகவும் கடைபிடிக்க வேண்டும். அப்பொழுதான் இரண்டாவது அலையின் தொடக்கத்தை படிப்படியாக அனைவரும் இணைந்து முறியடிக்க முடியும்.

அரசின் செயல்பாடுகள் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியாது. தனிமனிதர்களும் முறையாக கோட்பாடுகளை கடைபிடித்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நம்முடைய உயிர்களை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும். உண்மை நிலையை புரிந்து செயல்பட வேண்டும்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in