Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு: ‘ஸ்டிராங் ரூம்’ அருகே செல்ல கடும் கட்டுப்பாடுகள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்நேற்று நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன. பின்னர் தேர்தல் ஆணைய வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்டு, அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்தியபோலீஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன. தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 75 இடங்களில் வைத்து எண்ணப்படுகின்றன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டன. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள்ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அறையின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் ‘ஸ்டிராங் ரூம்’ என்றழைக்கப்படும் அறையில்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதைத்தொடர்ந்து ஆயுதப்படை போலீஸாரும், வாக்கு எண்ணும் மையத்தின்நுழைவு வாயிலில் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குஎண்ணும் மையத்திலும் இதேபோல 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி விடக்கூடாது என்பதற்காகவும், கள்ள ஓட்டுபோட்டு விடக்கூடாது என்பதற்கும், வாக்கு எண்ணும் மையத்திலேயே வேட்பாளர்களின் முகவர்களும் தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை 24 மணி நேரமும் பார்க்கும்வகையில் எல்.இ.டி. திரையும் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும்மையங்கள் தற்போது அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ‘ஸ்டிராங் ரூம்’ அருகே போலீஸார்கூட செல்லக்கூடாது என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணிமேரி கல்லூரி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களில் வைத்து வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெற உள் ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x