Published : 07 Apr 2021 03:15 am

Updated : 07 Apr 2021 05:55 am

 

Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 05:55 AM

ஏப்.7 - உலக சுகாதார தினம்: இயற்கையை நேசித்து நலமாய் வாழ்வோம்

world-health-day

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்.7-ம்தேதியை ‘உலக சுகாதார தினமாக’உலக சுகாதார நிறுவனம் அனுசரித்து வருகிறது. சுகாதாரம் என்பது உடல் அளவிலும் மனதளவிலும் நலமாக இருப்பதுதான். அதன்படி, தற்பொழுது மக்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்களா என்றால், பெரும்பாலோரிடம் இருந்து, இல்லை என்றுதான் பதில் வரும்.

‘இயற்கையை வணங்கு’ என்று நம் முன்னோர் அறிவுறுத்தியதை அறவேபுறக்கணித்து விட்டது இன்றைய சமுதாயம். நம்மை அறியாமலேயே, நாம் எதையும் கேட்காமலேயே, நாம் உயிர் வாழ எல்லா நன்மைகளையும் செய்து வருகிறது இயற்கை. ஆனால், நாம் இயற்கையை நம் காலடியில் போட்டு மிதித்து நசுக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு கீழ்க்கண்டவை சான்று:


நிலம்

விளைநிலங்களை எல்லாம் இன்று துண்டு போட்டு, வீட்டு மனைகளாக்கி வருகின்றனர். மணல் குவாரி, மண் குவாரி, கிரானைட் குவாரிகள் மூலம் பூமியைக் குடைகிறார்கள். தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் என்றுமே மக்காத குப்பையாக மாறி பூமியின் வளத்தை அழிக்கின்றன.

நீர்

தண்ணீரில் கலப்படம், குடிநீரில் சாக்கடை நீர் கலப்பது, ஆற்று நீரில்சாயப்பட்டறை மற்றும் தொழிற்சாலையின் கழிவுநீர் கலப்பது போன்ற செயல்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. இவ்வாறு மாசுபட்ட நீரை அருந்துவதால், காலரா, பேதி மற்றும் தோல் நோய்கள் வருகின்றன. மேலும் சாயம் கலந்த நீரை அருந்துவதால், பெண்களிடம் குழந்தைப்பேறின்மை அதிகமாகக் காண முடிகிறது.

நெருப்பு

மண் சட்டி வைத்து விறகு அடுப்பினால் செய்த சமையல் எவ்வளவு ருசியாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருந்தது. தற்போது சமைப்பதற்கு காஸ், மண்ணெண்ணெய் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோம்.

காற்று

காற்று இல்லாமல் ஒருசில மணித்துளிகள்கூட உயிரோடு இருக்க முடியாது. வாகனங்கள் விடும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும்புகை, புகைபிடிப்பதனால் உண்டாகும்புகை, இவைபோன்ற பல காரணங்களால் சுத்தமான காற்று அசுத்தமடைகிறது. காற்று மண்டலம் புகை மண்டலமாக மாறுகிறது. இதனால் ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறுகள் போன்ற நோய்கள் அதிகரிக்கின்றன.

ஆகாயம்

மழை பெய்யவும், தட்பவெப்ப நிலை சீராக இருக்கவும் ஆகாயம் நமக்கு பெரிதும் உதவுகிறது. ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்து விட்டதாகக் கூறுகிறார்கள். இதனால் அல்ட்ரா வைலைட் கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்குகின்றன. இந்த கதிர்வீச்சினால் தோல் புற்றுநோய்கள் வரும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகாயத்தில் நச்சுப் பொருட்கள் கூடக்கூட அமில மழை பெய்யும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒலி

வாகனங்கள், ஒலிபெருக்கிகள், தொழிற்சாலைகளில் இருந்து வரும் சப்தம், இவையெல்லாம் அமைதியை கெடுக்கின்றன. வீட்டுக்குள் சென்றால் தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பெட்டி மூலமும் இரைச்சல்! ஓயாதஇரைச்சலால் காது மிகவும் பாதிக்கப்படுகிறது. தலைவலி, மன பதற்றம், தூக்கமின்மை இவற்றோடு சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதும் உண்டு.

இதிலிருந்து எவ்வாறு மீளலாம்?

முடிந்த அளவுக்கு செயற்கை உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களை உபயோகிக்க வேண்டும். உணவு முறையில் சிறு தானியங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். புகைப்பிடிப்பதை ஒழிக்க தீவிரமான சட்டம் கொண்டு வரவேண்டும்

காடுகளை அழிப்பதைத் தவிர்த்தல், மழைநீரை சேகரித்தல் மற்றும் வீட்டிலும், வெளியிலும் ஒலி இல்லாசமுதாயத்தை உருவாக்க அனைவரும்இணைந்து பாடுபட வேண்டும். வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், அனைத்து பொது இடங்களிலும் மரம் நடுதலைக் கட்டாயமாக்க வேண்டும்.ஆகவே, வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலமும், இயற்கையை நேசிப்பதன்மூலமும் நாம் மட்டுமல்ல, நம்முடைய சந்ததியினரும் நலமுடன் வாழ முடியும்.

கட்டுரையாளர்: முதியோர் நல மருத்துவர், சென்னை


உலக சுகாதார தினம்World Health Day

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x