

வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பணப்பட்டுவாடா மும்முரமாக நடைபெற்றதாக மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி 84-வதுவார்டுக்கு உட்பட்ட கெம்பட்டி காலனி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குப்பதிவை பார்வையிட்ட கமல்ஹாசன், தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நேற்று புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அதிகமாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பணப்பட்டுவாடா மும்முரமாக நடைபெற்று வருகிறது எனவும், டோக்கன் வழங்கி பொருளாக பெற்றுக் கொள்ளுமாறு கூறியதாக தகவல் வந்ததால் புறப்பட்டு வந்தேன்.
டோக்கன் வழங்கியது தொடர்பான நகல் என்னிடம் உள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பாகதேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிப்பேன். புகார்கள் அதிகரிக்க அதிகரிக்க மறுவாக்குப்பதிவுக்கு வலியுறுத்துவோம்” என்றார். நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்த கேள்விக்கு, “கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்றார்.