Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

தள்ளாத வயதிலும் வாக்குச்சாவடிக்கு நடந்து வந்த மூத்த வாக்காளர்கள்

கோவை செங்கத்துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்களித்துவிட்டு சிரமத் துடன் திரும்பிச் செல்லும் மூதாட்டி. படம்: ஜெ.மனோகரன்

கோவை

சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, 80 வயதை கடந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 80 வயதை கடந்தவர்கள் ஏறத்தாழ 64,500 பேர் என கணக்கிடப்பட்டது. ஆனால் 6,900 பேர் மட்டுமே அஞ்சல் வாக்கு செலுத்தினர்.

வாக்குப்பதிவு தினமான நேற்று, இளைய வயதினரைப் போலவே, மூத்த வாக்காளர்களும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். தள்ளாத வயதிலும், வேகமாக நடக்க முடியாத நிலையிலும், வெயிலின் தாக்கத்தை பொறுத்துக் கொண்டு ஜனநாயக கடமையாற்றினர். அவர்களுக்கு ‘வீல்சேர்’ வசதி செய்யப்பட்டிருந்தது.

சூலூர் அருகேயுள்ள அப்புச்சி கோயில் வீதியைச் சேர்ந்தவர் கன்னிமுத்து(88). இவரது மனைவி பாப்பம்மாள்(78). இவர்கள் இருவரும், மகள் தனபாக்கியத்தின் உதவியுடன், சூலூர் பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நடந்து வந்து வாக்களித்தனர். இதுதொடர்பாக தம்பதி கூறும்போது,‘‘ சுதந்திரத்துக்கு பின்னர் நடந்த முதல் தேர்தலில் இருந்தே நாங்கள் வாக்களித்து வருகிறோம். வாக்களிப்பது எங்கள் உரிமை. சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல் என எதுவாக இருந்தாலும், எங்களது உரிமையை தவற விடாமல் வந்து வாக்களிக்கிறோம்.ஜனநாயக உரிமையை நிறைவேற்றிய மகிழ்ச்சி எங்களுக்கு உள்ளது’’ என்றனர்.

கோவை கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர். இவர் 1916-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்தார். இவரது பிறந்த தேதியை, அவரது பெற்றோர் ஓலையில் எழுதி வைத்துள்ளனர். தற்போது அவருக்கு 105 வயதாகிறது. விவசாயியான இவர், கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கருப்பராயன் பாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நேற்று நடந்து வந்து வாக்களித்தார். பின்னர் அவர் கூறும்போது,‘‘ நான் 1952-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை, எந்த ஒரு தேர்தலையும் தவற விடாமல் வந்து வாக்களித்து வருகிறேன்’’ என்றார்.

உறவினர் உதவியுடன் வந்து சூலூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் வாக்களித்த, சூலூரைச் சேர்ந்த ரோசி என்ற புஷ்பா(85) கூறும்போது,‘‘நான் கடந்த 60 வருடங்களாக வாக்க ளித்து வருகிறேன். வாக்களிப்பதன் கடமையை உணர்ந்துள்ளேன். இந்த உரிமையை அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x