Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

சொந்த ஊரில் வாக்களித்த வேட்பாளர்கள்

கோவையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் சொந்த ஊர்களில் வாக்களித்தனர்.

தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குனியமுத்தூர், சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை டாடாபாத் அழகேசன்சாலையில் உள்ள காமராஜர் மெட்ரிக் பள்ளியிலும், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ராமநாதபுரம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும் வாக்களித்தனர்.

சிங்காநல்லூர் திமுக வேட்பாளர் நா.கார்த்திக் பீளமேடு பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியிலும், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் சேரன்மாநகரில் உள்ள பள்ளியிலும் வாக்களித்தனர். கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் பையா (எ) கிருஷ்ணன் காளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் பெரியநாயக்கன் பாளையம் ஜோதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வாக்களித்தனர்.

சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி வதம்பச்சேரி, சவுடேஸ்வரி நகர் உயர்நிலைப்பள்ளியிலும், திமுக கூட்டணி கொமதேக வேட்பாளர் பிரீமியர் செல்வம் (எ) காளிச்சாமி சோமனூரில் உள்ள பள்ளியிலும் வாக்களித்தனர். கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வ.ம.சண்முக சுந்தரம் பொம்மாண்டம்பாளையம் அரசு பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ச்சுணன் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர்.

மேட்டுப்பாளையம் தொகுதி யில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.சண்முகசுந்தரம் திம்மம் பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் ஏ.கே.செல்வராஜ் ஆதிமாதையனூரில் உள்ள பள்ளியிலும் வாக்களித்தனர்.

பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், சட்டப்பேரவைத் துணைத் தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் தனது சொந்த ஊரான திப்பம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன் அவரது சொந்த ஊரான டி.கோட்டாம்பட்டியில் உள்ள எல்எம்எச்எஸ் பள்ளியில் வாக்களித்தார்.கருப்பம்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் அமமுக வேட்பாளர் சுகுமார் வாக்களித்தார்.

விதிமீறல் புகார்

வாக்குப்பதிவின்போது வாக்களிக்க வரும் கட்சியினர், வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரியும் முகவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருந்தது. அதன்படி, வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்குச்சாவடிக்குள் கட்சியின் பெயர், சின்னம் பதித்த சால்வைகள், தொப்பி போன்றவற்றை அணியக்கூடாது. இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், கோவை டாடாபாத் அழகேசன் சாலையில் உள்ள காமராஜர் மெட்ரிக் பள்ளியில் வாக்களித்தார். அப்போது, தனது உடையில் தாமரை சின்னத்தை அணிந்திருந்தார். இது விதிமீறல் என திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், “உடையில் சின்னத்தை அணிந்து வந்தது தேர்தல் விதிமீறல் ஆகும். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x