தங்கக்காசு டோக்கன் வழங்கியதாக திமுக மீது அதிமுகவினர் புகார்: நாமக்கல்லில் வாக்குவாதம், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

நாமக்கல் கோட்டை சாலை வாக்குச்சாவடி எதிரில் அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட தகராறையடுத்து காவல் துறையினர் சமரசம் செய்தனர். உள்படம்: கிழித்தெறியப்பட்ட தங்கக்காசு டோக்கன்.
நாமக்கல் கோட்டை சாலை வாக்குச்சாவடி எதிரில் அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட தகராறையடுத்து காவல் துறையினர் சமரசம் செய்தனர். உள்படம்: கிழித்தெறியப்பட்ட தங்கக்காசு டோக்கன்.
Updated on
1 min read

நாமக்கல்லில் தங்கக்காசு என அச்சடிக்கப்பட்ட டோக்கன்களை திமுகவினர் வழங்குவதாக அதிமுகவினர் புகார் கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் நாமக்கல் கோட்டை சாலை வாக்குச்சாவடி அருகில் திமுகவினர் தங்கக்காசு என அச்சடிக்கப்பட்ட டோக்கனை விநியோகிப்பதாக அதிமுகவினர் புகார் எழுப்பினர்.

சில டோக்கன்களை அவர்கள் கிழித்து எறிந்தனர். இதனால், திமுக, அதிமுகவினரிடையே தகராறு ஏற்பட்டது.

விரைந்து வந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர். திமுகவினர் கூறும்போது, நாங்கள் எந்த டோக்கனையும் வழங்கவில்லை. அதிமுகவினர் திமுகவினர் அச்சடித்ததுபோல் தங்கக்காசு டோக்கனை அச்சடித்து அவற்றைக் கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபடுகின்றனர், என்றனர்.

தொடர்ந்து காவல் துறையினர் சமரசம் செய்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

எனினும், அப்பகுதியில் அசம்பாவிதம் தவிர்க்க கூடுதலாக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in