Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

சாலை, அடிப்படை வசதி செய்து தரக்கோரி கோட்டூர் மலைக் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப் பேரவை தொகுதி கோட்டூர் மலைக் கிராமத்தில் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்ததால் வாக்காளர் நடமாட்டமின்றி காணப்பட்ட வாக்குச் சாவடி. அடுத்தபடம்: கோட்டூர் மலையில் தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் வைத்த அறிவிப்பு.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் கோட்டூர் மலைக்கு சாலை வசதி கேட்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

பென்னாகரம் சட்டப் பேரவை தொகுதி வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது கோட்டூர் மலைக் கிராமம். இந்த கிராமத்தில் 336 வாக்காளர்கள் வசிக்கின்றனர். நேற்று நடந்த தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் இந்த வாக்காளர்கள் வாக்களிக்க கோட்டூர் மலை அரசுப் பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த மலைக்கு அடிவாரத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கழுதைகள் மீது தான் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இங்கு வசிக்கும் மக்கள் சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதற்கு முன்பும் பல சட்டப் பேரவை, மக்களவை பொதுத் தேர்தல்களின்போதும் சாலை வசதி கேட்டு தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்தனர். பின்னர் அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று வாக்களித்து வந்தனர்.

ஆனால், இம்முறை தேர்தலை உறுதியாக புறக்கணிப்பது என முடிவு செய்த கோட்டூர் கிராம மக்கள் நேற்று வாக்களிக்க வரவில்லை. தங்கள் மலைக் கிராமத்துக்கு சாலை வசதி அமைத்து வாகனம் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோட்டூர் மலைக்கு வரும்போது தான் வாக்களிப்போம். மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகமும் செய்திட வேண்டும் என்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்த கிராம மக்கள் இரவு 7 மணி வரை வாக்களிக்க வரவில்லை.

வருவாய் மற்றும் வளர்ச்சித் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் பலமுறை கோட்டூர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. எனவே, நேற்று கோட்டூர் மலையில் அமைக்கப்பட்ட வாக்குப் பதிவு மையத்தில் அங்கு வசிக்கும் எந்த வாக்காளர்களும் வாக்களிக்கவில்லை. வாக்குப் பதிவு மைய பணியில் ஈடுபட்ட 2 அரசு ஊழியர்கள் மட்டும் இந்த வாக்குச் சாவடியில் நேற்று வாக்களித்தனர்.

கோட்டூர் மலைக் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x