

தமிழர் முன்னேற்றப் படை என்றஅமைப்பின் நிறுவனர் கி.வீரலட்சுமி, பல்லாவரம் தொகுதியில் ‘மை இந்தியா பார்ட்டி’ வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் பரப்புரையின்போது அவரது வாட்ஸ்-அப் நம்பருக்கு மர்ம நபர்ஒருவர் ஆபாச வீடியோ அனுப்பிய தாக கூறப்படுகிறது. அதுபற்றி சங்கர் நகர் போலீஸில் வீரலட்சுமி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஆபாச வீடியோ அனுப்பிய நபரை 3 நாட்களில் கைது செய்யாவிட்டால், அவரைதானே கண்டுபிடித்து, நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைப்பேன் என்றும், அந்த காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்றும் ஒரு வீடியோ பதிவையும் சமூக வலைதளத்தில் வீரலட்சுமி பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், 20 நாட்களாகியும் சம்பந்தப்பட்ட நபரை போலீஸார் கைது செய்யாததைக் கண்டித்து நேற்று காலை சென்னை விமான நிலையம் அருகே உள்ள 100 அடி செல்போன் டவர் மீது ஏறினார் வீரலட்சுமி. ஆபாச வீடியோஅனுப்பியவரை கைது செய்யும்வரை கீழே இறங்க மாட்டேன் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். போலீஸாரும் கட்சி நிர்வாகிகளும் அவரை சமாதானப்படுத்தினர். மர்ம நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து வீரலட்சுமி தர்ணாவை கைவிட்டு, கீழே இறங்கி வந்தார். வாக்குப்பதிவு நாளில் பெண் வேட்பாளர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தர்ணாவில் ஈடுபட்டது அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியது.