

உசிலம்பட்டியில் 90 வயது மூதாட்டி ஒருவர் தள்ளாத வயதிலும் சுட்டெரிக்கும் வெயிலில் உதவிக்கு ஆள் யாரும் இன்றி தனியாக வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (90). இவர், நேற்று உசிலம்பட்டி டிஎல்எஸ் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார். சுட்டெரிக்கும் வெயிலில் ஊன்றுகோல் உதவியுடன் உதவிக்கு ஆள் அழைத்து வரா மலே தள்ளாத வயதிலும் தனியாக முகக்கவசம் அணிந்து வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தார்.
மூதாட்டி வாக்களிக்க வந்த போது வாக்குச்சாவடியில் உதவிக்கு நின்றுகொண்டி ருந்தவர்கள் ஓடிச்சென்று உதவ முயன்றனர்.
ஆனால், அவரோ நானே வந்துவிடுவேன் என்றார். ஆனாலும், வாக்குச்சாவடி மையப் படிக்கட்டுகள் உயரமாக இருந்ததால் அவர்கள் உதவியுடன் கைத்தாங்கலாக படிகளில் ஏறி வாக்களித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘‘எனக்கு ஒரே மகன் இருந்தான். அவனும் தீ விபத்தில் இறந்துவிட்டான். அரசின் உதவித்தொகை 35 ரூபாயாக இருந்தபோதே வாங்கினேன். இப்போது உதவித்தொகை ரூ.1,000. இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் நான் வாக்களித்து உள்ளேன். வாக்களிக்காமல் இருந்ததில்லை. இந்த முறையும் காலையிலே வாக்களிக்க வந்துவிட்டேன்,’’ என்றார்.