Published : 13 Nov 2015 03:25 PM
Last Updated : 13 Nov 2015 03:25 PM

3 ஆண்டுகளுக்குப் பிறகு 100 அடியை தாண்டியது சாத்தனூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் நீர்மட்டம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 100 அடியை தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் உயரம் 119 அடி. 7,351 மில்லியன் கனஅடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்மட்டம் 2011-12-ம் ஆண்டில் முழு கொள்ளளவை (119 அடி) எட்டியது. அதன்பிறகு 2012-13 மற்றும் 2013-14 ஆகிய 2 ஆண்டுகளிலும் அதிகபட்சமாக 89 அடி, 2014-15-ம் ஆண்டில் 84.3 அடியை எட்டியது. கடந்த 4-ம் தேதி 84.50 அடியாக இருந்தது. அதன்பிறகு நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கி, கடந்த 3 நாட்களில் கிடுகிடுவென உயர்ந்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த 3 ஆண்டுக்குப் பிறகு சாத்தனூர் அணை 100 அடியை நேற்று காலை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைக்கு விநாடிக்கு 6,933 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் 3,754 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. நேற்று பிற்பகலில் அணையின் நீர்மட்டம் 102 அடியை கடந்தது.

50 ஆயிரம் ஏக்கர் பயன்பெறும்

மழையின் தாக்கம் தொடர்ந்து நீடித்தால் சாத்தனூர் அணை தனது முழு கொள்ளளவை ஓரிரு வாரத்தில் எட்டும் என்று பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர். அதன் மூலம் 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், பிக்அப் அணை வழியாக பாசனத்துக்கு திறந்து விடப்படும். இடதுபுற கால்வாய் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 17,641 ஏக்கர், விழுப்புரம் மாவட்டத்தில் 6,263 ஏக்கர் மற்றும் வலதுபுற கால்வாய் வழியாக விழுப்புரம் மாவட்டத்தில் 21 ஆயிரம் ஏக்கர், மையத்தில் உள்ள ஆற்றில் இருந்து விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அணைக்கட்டு பகுதியில் உள்ள 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.

பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, “ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் பிக்அப் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நிரம்பி முன்கூட்டியே திறக்கப்பட்டால், 1,000 கனஅடி தண்ணீருக்கு 7.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x