

கோவில்பட்டியில் பணம் விநியோகம் செய்ததாக அதிமுக கிளை செயலாளர் மீது அமமுகவினர் புகார் செய்தனர். அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
கோவில்பட்டி புதுக்கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்(46). இவர் அப்பகுதி அதிமுக கிளை செயலாளராக உள்ளார். இவர் நேற்று வாக்காளர்களுக்கு பணம்விநியோகிப்பதாக அமமுகவினருக்கு தகவல் கிடைத்தது. புதுக்கிராமம் முகமது சாலிகாபுரம் பகுதிக்கு வந்த அமமுகவினர், ஆரோக்கியராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அதிமுக - அமமுகவினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமையிலான போலீஸார் அவர்களை விலக்கி விட்டு, ஆரோக்கியராஜை கிழக்குகாவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜூ அங்கு வந்ததால் அதிமுகவினர் திரண்டனர். அதேசமயம் அமமுகவினரும் வந்ததால், மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் வந்து அவர்களை விலக்கி விட்டனர்.
இதற்கிடையே, ஆரோக்கியராஜ் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளுக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். மாவட்டஎஸ்பி எஸ்.ஜெயக்குமார் விசாரணை நடத்தினார்.