Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

இரவு 7 மணி நிலவரப்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 77.31 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்தது

ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட புள்ளாநேரி அரசு நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் வீரமணி வாக்களித்தார். அடுத்த படம்: திருப்பத்தூர் அவ்வை நகரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வாக்களித்தார். கடைசி படம்: வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு மூலிகை முகக்கவசங்களை வழங்கிய சித்த மருத்துவர்கள் விக்ரம்குமார், பாஸ்கரன்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி களிலும் அமைதியாகவும், விறு விறுப்பாகவும் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் மின்னனு வாக்குப்பதிவு இயந் திரங்கள் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு சற்று நேரம் நிறுத் தப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் 1,371 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 154 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதால், அங்கு கூடுதல் பாது காப்பு அளிக்கப்பட்டிருந்தது.

திருப்பத்தூர் தொகுதியில் 2,38,544 வாக்காளர்கள், ஜோலார்பேட்டை தொகுதியில் 2,39,413 வாக்காளர்கள், வாணியம்பாடி தொகுதியில் 2,49,357 வாக் காளர்கள், ஆம்பூர் தொகுதியில் 2,37,993 வாக்காளர்கள் என மொத் தம் 9 லட்சத்து 65 ஆயிரத்து 307 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட உமர் ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியபோது மின்னனு வாக்குப்பதிவு இயந் திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு சிறிது நேரத்துக்கு பிறகு தொடங்கியது. அதேபோல, திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கிட்டப்பனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, பெல் நிறுவன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பழுதான வாக்குப் பதிவு இயந்திரத்தை சுமார் 1 மணி நேரத்தில் சரி செய்தனர். அதன்பிறகு அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது. திருப்பத்தூர் கொரட்டி பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் விவிபாட் இயந்திரம் பழுடைந்தது. அதன்பிறகு 15 நிமிடங்களில் இயந்திரம் சரி செய்யப்பட்டு அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம் ஒன்றியம் குரும்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத் தில் காலை வாக்குப்பதிவு தொடங் கியவுடன் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது.

அப்போது, ஜோலார்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் தேவராஜ் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்து தனது வாக்கினை செலுத்தினார். இதே வாக்குச் சாவடியில் வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் தனது வாக்கினை செலுத்தினார். வாணியம்பாடி காதர்பேட்டை அரசுப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் முகமதுநயீம் தனது வாக்கினை செலுத்தினார்.

ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட புள்ளாநேரி அரசு நடு நிலைப்பள்ளியில் வணிகவரித் துறை அமைச்சரும், அதிமுக வேட் பாளருமான கே.சி.வீரமணி தனது வாக்கினை செலுத்தினார்.

ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட மிட்டாளம் குட்டகிந்தூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் ஆம்பூர் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான வில்வநாதன் தனது வாக்கினை நேற்று செலுத்தினார். திருப்பத்தூர் தொகுதிக்குஉட்பட்ட மாடப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திருப்பத்தூர் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான நல்லதம்பி தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

அதேபோல, பாமக வேட்பாளர் டி.கே.ராஜா வீரபத்திரமுதலியார் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

4 சட்டப்பேரவைத் தொகுதி களிலும் தேர்தல் அமைதியாகவும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க துணை ராணுவத்தினர், காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள், சிறப்பு பொது பார்வை யாளர், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆகியோர் மாவட்டம் முழுவதும் பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட ஜாப்ராபாத் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடியை கண்காணிக்க ஆட்சியர் சிவன் அருள் அங்கு சென்றபோது, வாக்குச்சாவடிக்கு அருகாமையில் ஒரே இடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஒன்றாக கூடி வாக்காளர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதைக்கண்ட ஆட்சியர் அவர் களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். அதேபோல, ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி, கோடியூர், வக்கணம்பட்டி உள்ளிட்ட பகுதி களில் வாக்குச்சாவடிக்கு அருகாமையில் அரசியல் கட்சியினர் பந்தல் அமைத்து வாக்காளர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஆய்வுக்கு வந்த திருப்பத்தூர் எஸ்பி டாக்டர் விஜயகுமார் அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து. அங்கு போடப்பட்ட பந்தல்களை காவல் துறையினர் பிரித்து அப்புறப்படுத்தி அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

அனைத்து வாக்குச்சாவடி களிலும் கரோனா தடுப்பு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க வந்த வாக் காளர்களுக்கு சித்த மருத்துவர்கள் விக்ரம்குமார், பாஸ்கரன் ஆகியோர் மூலிகை முகக்கவசம், கபசுர குடிநீர் ஆகியவை வழங்கி கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.

இரவு 7 மணி நிலவரப்படி திருப்பத்தூர் தொகுதியில் 77 சதவீதமும், ஜோலார்பேட்டை தொகுதியில் 80.92 சதவீதமும், வாணியம்பாடி தொகுதியில் 75 சதவீதமும், ஆம்பூர் தொகுதியில் 76.4 சதவீதம் என சராசரியாக மொத்தம் 77.31 சதவீதம் வாக்குப் பதிவு பதிவாகிவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x