Published : 06 Apr 2021 07:53 PM
Last Updated : 06 Apr 2021 07:53 PM

12 மணி நேர வாக்குப்பதிவு நிறைவு: அமைதியாக நடந்து முடிந்தது 16-வது சட்டப்பேரவைத் தேர்தல்

சென்னை

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 12 மணி நேரமும், முதன்முறையாக கரோனா நோயாளிகளுக்காகக் கவச உடையுடன் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்ட தேர்தலும் இதுதான். சில மாவட்டங்களில் மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாவிட்டாலும் 70 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடந்திருக்க வாய்ப்புள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் அறிவிக்கப்பட்டு மார்ச் 12 வேட்புமனுத் தாக்கல் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

கூட்டணி தொகுதி எண்ணிக்கை, தொகுதி இறுதிப்படுத்துதலில் சலசலப்பு ஏற்பட்டாலும் திமுக கூட்டணி தனது கூட்டணியை உறுதிப்படுத்தியது. அதிமுக அணியிலிருந்த தேமுதிக எண்ணிக்கை குறைவால் அமமுக அணிக்குத் தாவியது. தமிழகத்தில் முதன்முறையாக ஒவைசி கட்சி தேர்தல் களத்தில் குதித்தது. அமமுக கூட்டணியில் அது குதித்தது.

அதிமுக பழைய கூட்டணியைத் தொடர்ந்தது. மக்கள் நீதி மய்யம் சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட நிலையில் சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகேவுடன் களம் கண்டது. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனியாக நின்றது.

கடுமையான பிரச்சாரத்தில் பல சுவாரஸ்ய சம்பவங்கள், முட்டல் மோதல்கள் அனைத்தும் நடந்தன. வாக்குப்பதிவு நாளான 6-ம் தேதி வரை கரோனா காரணமாகத் தேர்தல் தள்ளிவைக்கப்படும் என்கிற கருத்து பொதுமக்களிடையே பரவியது. அதிமுக புகாரின் பேரில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி, கே.என்.நேரு நிற்கும் தொகுதி உள்ளிட்ட 5 தொகுதிகள் தேர்தல் தள்ளி வைக்கப்படலாம் என்று நேற்று மாலை வரை கருத்து ஓடியது.

ஆனால், இவை எதுவும் இல்லாமல் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. முதன்முறையாக 12 மணி நேர வாக்குப்பதிவும், அதில் ஒரு மணி நேரம் கரோனா நோயாளிகளுக்கும் என்கிற நடைமுறை இந்த முறை நடந்தது.

வாக்குப்பதிவின்போது பெரிய அளவில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பிரச்சினைகள் மட்டுமே வெளியில் வந்தன. தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாபதியைத் தாக்க முயற்சி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யின் கார் கண்ணாடி உடைப்பு போன்று அங்கொன்றும் இங்குன்றும் சிறு சிறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் தோன்றிச் சரிசெய்யப்பட்டன.

அதேபோன்று உதயநிதி ஸ்டாலின், வானதி சீனிவாசன் இருவரும் தேர்தல் நடத்தை விதியை மீறி கட்சி சின்னத்துடன் வாக்களிக்க வந்தது குறித்து புகார் அளிக்கப்பட்டது. குஷ்பு காரில் கட்சிக்கொடியுடன் சென்றதும் புகாராகக் கூறப்பட்டது.

சைக்கிளில் வந்த விஜய், செல்போனைப் பறித்து முகக்கவசம் அணிய அறிவுரை கூறிய அஜித், அஜித்தின் சைக்கிள் முகக்கவசம் கலர், பெட்ரோல் டீசல் பிரச்சினைக்காக விஜய் சைக்கிளில் வந்ததாக வைரலான விவாதம், விஜய் சேதுபதியின் வாக்காளர்களுக்கான வேண்டுகோள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கனிமொழி ஆம்புலன்ஸில் முழுக் கவச உடையுடன் வந்து வாக்களித்தது, மதுசூதனன் மருத்துவமனையிலிருந்து வீல் சேரில் கவச உடையுடன் வந்து வாக்களித்தது எனச் சில சுவாரஸ்யமான, மனதை வருடும் சம்பவங்களுடன் மாலை 7 மணிக்கு சுமுகமாக வாக்குப்பதிவு முடிந்தது.

இந்தத் தேர்தல் கடந்த ஆண்டு தேர்தல் போன்று உற்சாகம் பொங்கும் தேர்தலாக இல்லை. சாலைகளில் ஆட்கள் இன்றி வெறிச்சோடியிருந்ததை எங்கும் காண முடிந்தது. சென்னை, செங்கல்பட்டு, நெல்லை போன்ற மாவட்டங்களில் வாக்களிக்க உற்சாகமின்றி வாக்காளர்கள் இருந்ததைக் காண முடிந்தது.

வாக்காளர்களுக்கு 100% பூத் சிலிப் என்று தேர்தல் ஆணையம் கூறினாலும் அதைக் கோட்டை விட்டதைத்தான் காண முடிந்தது. அதேபோன்று கொத்து கொத்தாக வாக்காளர்கள் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட புகாரும் நடந்ததைக் காண முடிந்தது. மொத்தத்தில் அமைதியான தேர்தல் வாக்குப் பதிவாக இன்றைய நாள் அமைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x