

போடி தொகுதி பெருமாள்கவுண்டன்பட்டியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் எம்.பி. ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
போடி தொகுதி வாக்குப்பதிவினை ப.ரவீந்திரநாத் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார். கோடாங்கிபட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அவர் பெருமாள்கவுண்டன்பட்டியில் வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவைப் பார்வையிட்டார். பின்பு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது காருக்கு அருகில் நின்றிருந்த அக்கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் அந்த ஊரைச் சேர்ந்த சிலர் எம்.பி.யின் கார் மீது கற்களை வீசினர். இதில் முன்பக்க, பின்பக்க மற்றும் பக்கவாட்டுக் கண்ணாடிகள் சேதமடைந்தன.
இதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடியில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலர்கள் அவர்களை விரட்டினர்.
கார் கண்ணாடியை உடைத்தவர்களைக் கைது செய்யவேண்டும் என்று அதிமுகவினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எஸ்.பி., இ.சாய்சரண்தேஜஸ்வி, போடி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். பாதுகாப்பிற்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் கொடுத்தனர். ப.ரவீந்திரநாத் எம்.பி. கூறுகையில், ''திமுகவினர் தோல்வி பயத்தில் உள்ளனர். எனவே. மது போதையில் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.
இத்தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், ''அதிமுக, அமமுகவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைதான் அது. அதிமுகவினர் இதை திசைதிருப்பி வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கும் திமுகவினருக்கும் சம்பந்தம் இல்லை'' என்றார்.
அக்கிராம மக்கள் கூறுகையில், ''எம்.பி.யின் காரில் இருந்த கட்சியினர் இங்குள்ள சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது முற்றி தள்ளுமுள்ளாக மாறியது. இதில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கீழே விழுந்து தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இந்த ஆத்திரத்தில் சிலர் கல்வீசித் தாக்கினர்'' என்றனர்.
போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் நடந்தபோது எம்.பி. ரவீந்திரநாத் காரில் இல்லாததால் அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. வேறு காரில் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.