

உதகை அருகே சோலூர் வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் போஜராஜன், அதிமுகவினர் மற்றும் திமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ்-பாஜக, கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக-திமுக, குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக-அதிமுக இடையே போட்டி நிலவுகிறது. நீலகிரி மாவட்டத்தில் அமைதியான முறையில் எந்த அசம்பாவிதமும் இன்றி வாக்குப்பதிவு நடைபெற்றது. கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் மு.போஜராஜன் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குப்பதிவைப் பார்வையிட்டு வந்தார். இந்நிலையில், உதகை அருகே சோலூர் வாக்குச்சாவடிக்கு அவர், அதிமுக முன்னாள் எம்.பி., கே.ஆர்.அர்ஜூணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளுடன் வந்தார்.
சோலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியினுள் ஆதரவாளர்களுடன் போஜராஜன் சென்று, தேர்தல் அலுவலர்களிடம் வாக்குப்பதிவு விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.
இந்நிலையில், இதை அறிந்து அங்கு திமுகவினர் திரண்டனர். வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர் மட்டுமே செல்ல அனுமதி உள்ள நிலையில், அதிமுகவினரை எப்படி அனுமதிக்க முடியும் என தேர்தல் அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினர்.
இதனால், இரு தரப்பினரிடையே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்ட நிலையில், பாஜக வேட்பாளர் போஜராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறினர்.
திமுகவினர் தேர்தல் அலுவலர்களின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர்களிடம் வாக்குச்சாவடியினுள் வேட்பாளரைத் தவிர பிறரை அனுமதித்தது குறித்து புகார் அளிக்கப்படும் எனத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.