விழுப்புரம் அருகே பதற்றமான வாக்குச்சாவடியில் இரு தரப்பினர் மோதல்: துணைநிலை ராணுவ வீரர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டினர்

விழுப்புரம் அருகே பிடாகம் கிராமத்தில் இரு தரப்பினர் மோதலைக் கட்டுப்படுத்த துணைநிலை ராணுவத்தினர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டினர்.
விழுப்புரம் அருகே பிடாகம் கிராமத்தில் இரு தரப்பினர் மோதலைக் கட்டுப்படுத்த துணைநிலை ராணுவத்தினர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டினர்.
Updated on
1 min read

விழுப்புரம் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடியில் ஒன்றான பிடாகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் அதிமுகவினரும், திமுகவினரும் வாக்களிக்க வருவோரிடம் தாங்கள் சார்ந்துள்ள கட்சியில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்கு கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு ஓய்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று மாலை மீண்டும் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. கூடியிருந்த கூட்டத்தைக் கலைக்க துணைநிலை ராணுவ வீரர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் அப்பகுதியில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தினர். பின்னர் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே செஞ்சி தொகுதிக்குட்பட்ட நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள 3 வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்து பொதுமக்கள் தீவிரமாக வாக்கு செலுத்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில் வாக்காளர்கள் தங்களது பைக்குகளை 200 மீட்டர் தூரத்தில் நிறுத்திவிட்டு வர வேண்டுமென்ற தேர்தல் விதிமுறையைப் பொருட்படுத்தாமல், முதியவர்களை பைக்கில் கூட்டிவந்தனர்.

அப்போது வெளிமாநில போலீஸார் வாகனங்களை லத்தியால் தட்டியதோடு வாகனக் கண்ணாடிகளை உடைத்ததால் ஆவேசமடைந்த வாக்காளர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நாங்கள் யாரும் வாக்களிக்க உள்ளே வரமாட்டோம் என்று வெளியேறினர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in