

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளில் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் பல வாக்குச் சாவடிகளில் சக்கர நாற்காலிகள் இல்லாமல் முதியோர், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியுற்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 259 வாக்குச்சாவடி மையங்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான 259 மடக்கு சக்கர நாற்காலிகள் கடந்த 29-ம் தேதி அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பது தொடர்பாக ஏதும் உதவி பெற 7598000251 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. விஷ்ணு தெரிவித்திருந்தார்.
ஆனால் வாக்குப்பதிவு நாளான நேற்று பல்வேறு வாக்குச் சாவடிகளில் சக்கர நாற்காலிகள் இல்லாமல் முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க கடும் அவதியுற்றனர்.
பாளையங்கோட்டையில் காதுகேளாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பயிலும் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியிலும்கூட சக்கர நாற்காலி இல்லாமல் பலரும் வாக்களிக்க சிரமப்பட்டனர். பல வாக்குச் சாவடிகளில் முதியோரையும், மாற்றுத்திறனாளிகளையும் அங்கிருந்தவர்கள் தூக்கிக்கொண்டு வாக்குச் சாவடிக்குள் சென்றனர். வாக்களித்தபின் மீண்டும் அங்கிருந்து தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர்.
100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏராளமான செலவுகளை செய்யும் தேர்தல் ஆணையம், ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் சக்கர நாற்காலி மற்றும் தன்னார்வலர்களை நியமிக்கத் தவறிவிட்டது குறித்து முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வந்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.
கரோனா பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை மூலம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்களிக்க வந்தவர்களின் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கையுறைகளும் வழங்கப்பட்டன. வாக்குச் சாவடிகளுக்குள் செல்லுமுன் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
வாக்களித்துவிட்டு திரும்பியபின் கையுறைகளை கழற்றி அங்குள்ள பிளாஸ்டிக் தொட்டியில் போடும்வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெருபாலும் வாக்குச் சாவடிகளுக்கு வந்த வாக்காளர்கள் முககவசம் அணிந்திருந்தனர். அவ்வாறு அணியாமல் வந்தவர்ளுக்கு முககவசங்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது