

நீலகிரி மாவட்டத்தில் மாலை 3 மணியளவில் 52.17 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர் (தனி), குன்னூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
உதகை தொகுதியில் 9 பேர், கூடலூர் தொகுதியில் 7 பேர், குன்னூர் தொகுதியில் 10 பேர் என மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மாவட்டம் முழுவதும் 868 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இவற்றில், பதற்றமான 112 வாக்குச்சாவடிகளில் தலா ஒரு நுண் பார்வையாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு மையங்களில் காவல்துறையினர், துணை ராணுவ வீரர்கள், 250 ஊர்க்காவல் படையினர் என, மொத்தம் 1,800 பேர் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கரோனா பரவலைத் தடுக்க வாக்காளர்களுக்குக் கையுறைகள் வழங்கப்படுகின்றன. வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளைச் சுத்தப்படுத்த சானிடைசர் வழங்கப்படுகிறது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் மாலை 3 மணியளவில் 52.17 சதவீதம் வாக்குகள் பதிவாகின. உதகையில் 49.42, குன்னூரில் 52.73, கூடலூரில் 54.61 சதவீதம் வாக்குகள் பதிவாகின.