Published : 06 Apr 2021 03:57 PM
Last Updated : 06 Apr 2021 03:57 PM

நிலக்கோட்டை தொகுதியில் வாக்குச்சாவடி மாற்றத்தால் தேர்தலைப் புறக்கணித்த மக்கள்: கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட காமுபிள்ளைசத்திரத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தலைப் புறக்கணிப்பதாக வைக்கப்பட்டுள்ள பதாகை.    

நிலக்கோட்டை 

தங்கள் ஊரில் உள்ள பள்ளியில் வாக்களிக்க வழிவகை செய்யாமல் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊருக்கு வாக்களிக்கச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்திய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து நிலக்கோட்டை தொகுதி காமுபிள்ளைசத்திரம் கிராமத்தின் ஒரு பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டினர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் செம்பட்டி அருகேயுள்ளது காமுபிள்ளைசத்திரம். இந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் இந்த கிராம மக்கள் அனைவரும் தங்கள் ஊரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து வந்துள்ளனர். இந்த முறை காமுபிள்ளைசத்திரத்தின் ஒரு பகுதியைச் சேர்ந்த 290 வாக்காளர்கள், மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுக்குலாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்க மாற்றப்பட்டனர்.

இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களை வழக்கம்போல் தங்கள் ஊரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரினர்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாக ஊர் நுழைவாயிலில் பதாகை வைத்தனர். இதைப் பார்த்துச் சென்ற அதிகாரிகளும் மக்களைச் சமாதானப்படுத்தி ஓட்டளிக்கச் செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் ஊர் மக்கள்.

தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததைக் கண்டித்து நேற்று வீடுகளில் கருப்புக்கொடி கட்டியவர்கள் யாரும் வாக்களிக்கச் செல்லவில்லை. 290 வாக்காளர்களும் தேர்தலைப் புறக்கணித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x