

இசை பட்டறை அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இசை இறுதிப் போட்டி சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது.
இளம் தலைமுறை இசைக் கலைஞர்களை அடையாளம் கண்டு, எதிர்கால இசை உலகுக்கு அறிமுகப்படுத்தும் பணிகளில் இசை பட்டறை அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இதற்காக முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு இடை யிலான இசைப் போட்டி கடந்த அக்டோபர் 31-ம் தேதி முதல் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்று வருகிறது.
இதில் 40 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் குழுக்கள் பங்கேற்று தமிழிசைப் பாடல்களைப் பாடினர். ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த பாடகர், 2 சிறந்த வாத்திய இசைக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ஒவ்வொரு நாளும் நித்திய மகாதேவன், மேன்டலின் ராஜேஷ், பாலா சந்திரசேகர் உள்ளிட்ட இசைப் பிரபலங்கள் பங்கேற்று, போட்டியில் பங்கேற்ற மாணவர்களை மதிப்பிட்டனர்.
இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 8 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, தமிழிசை பாடல்களை பாடினர். பாடகி அருணா சாய்ராம், கடம் வித்துவான் உமாசங்கர் ஆகியோர் மதிப்பீடு செய்தனர்.
இதில் குரோம்பேட்டையில் உள்ள எஸ்.ஆர்.டி.எஃப். விவே கானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், சுவாமி’ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 2-ம் இடத் தையும், பி.எஸ்.பி.பி. திருமலை பிள்ளை பள்ளி மாணவர்கள் 3-ம் இடத்தையும் பெற்றனர். முதலிடத்தை பிடித்த பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங் கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் இசை பட்டறை அமைப்பின் நிர்வாகிகள் இளங்கோ குமணன், முரளிதரன், அனந்தகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.