Published : 06 Apr 2021 03:59 PM
Last Updated : 06 Apr 2021 03:59 PM

மதுரையில் வாக்குச்சாவடிகள் முன் குப்பைபோல் குவிந்த கையுறை, முகக்கவசங்கள்: தொற்று தடுக்க ஏற்படுத்திய நடவடிக்கை தோற்றுப்போனது

மதுரை

மதுரை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்கப் பயன்படுத்திய கையுறை, முகக்கவசங்களைப் போட வைக்கப்பட்டிருந்த தொட்டிகள் நிரம்பின. இதனால், மதியத்திற்குப் பிறகு வாக்குச்சாவடிகள் குப்பை மேடாக காணப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவுதால் வாக்குச்சாவடி மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியது.

அதன்படி வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து அவர்கள் வாக்களிக்க கையுறை, முகக்கவசம் அணிந்து வராவிட்டால் முகக்கவசமும் வழங்கியது.

வாக்காளர்களும் கையுறை, முககவசத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துவிட்டு வெளியே வரும்போது, அங்குள்ள குப்பை தொட்டிகளில் கையுறைகளைக் கழற்றி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குப்பை தொட்டிகளில் குவியும் வாக்காளர்கள் போட்டுச் செல்லம் கையுறை குவிந்தவுடன் அதனை, வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்ட சுகாதாரப்பணியாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும்.

ஆனால், வாக்குச்சாவடிகளில் போதுமான சுகாதாரப்பணியாளர்களை தேர்தல் ஆணையம் பணியமர்த்தவில்லை.

பணிநியமனம் செய்த சுகாதாரப் பணியாளர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்வது, வாக்காளர்களுக்கு முகக்கவசம், கையுறை வழங்கும் பணிகளை ஒப்படைத்தனர். அவர்களால் அந்தப் பணிகளையும் செய்துவிட்டு, குப்பைத் தொட்டிகளில் குவியும் கையுறை, முகக்கவசங்களையும் உடனுக்குடன் அப்புறப்டுத்த முடியவில்லை. குப்பைத் தொட்டிகளில் குப்பை நிறைந்து கிடப்பது போல், முககவசம், கையுறை நிரம்பி கிடந்தன. அதனால், கையுறைகளையும், முகக்கசவங்களையும் குப்பை தொட்டி அருகே வாக்குச்சாவடிமுன் கழற்றி வீசி சென்றனர்.

கரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காகவே கையுறையையும், முகக்கவசத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கியது. ஆனால், வாக்காளர்கள் தாங்கள் அணிந்த கையுறையையும், முகக்கவசங்களை வாக்குச்சாவடிகள் முன் வீசிச் சென்றதால் அவர்களில் யாருக்காவது வெளியே தெரியாமல் தொற்று இருந்து அது மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டது.

அதனால், தேர்தல் ஆணையத்தின் முகக்கவசம், கையுறை கொடுத்த நோக்கம் நிறைவேறாமல் தொற்று பரவுதற்கு ஒரு வாய்ப்பாகவே அது அமைந்தது.

காற்றில் பறந்த சமூக இடைவெளி:

கரோனா தொற்று பரவாமல் தடுக்க வாக்காளர்கள் சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நின்று வாக்களிக்க தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடிகள் முன் இடைவெளி விட்டு வட்டங்கள் போட்டிருந்தது. ஆனால், மதுரையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சமூக இடைவெளியைப் பார்க்க முடியவில்லை.

வாக்காளர்கள் வழக்கம்போல் நெருக்கமாக ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டே வரிசையில் நின்று வாக்களித்தனர். அவர்களைப் பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீஸார் ஒருங்குப்படுத்தவில்லை.

தேர்தல் பார்வையாளர்கள் வரும்போது மட்டும் போலீஸார் வாக்காளர்களை எச்சரித்து அந்த வட்டங்களில் வரிசையில் நின்று வாக்களிக்க கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x