Last Updated : 06 Apr, 2021 03:49 PM

 

Published : 06 Apr 2021 03:49 PM
Last Updated : 06 Apr 2021 03:49 PM

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவைக் கண்டித்து சாலை மறியல், தர்ணா போராட்டம்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவைக் கண்டித்து சாலை மறியல், தர்ணா போராட்டம்.

புதுச்சேரி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்குச்சாவடிகளின் அருகில் கட்சி சின்னம் பொருந்திய சிறிய பேப்பர்களை வீசிய என்.ஆர்.காங்கிரஸாரைக் கண்டித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி போட்டியிடுகிறார். இந்நிலையில், இன்று (ஏப். 06) வாக்குப்பதிவின்போது, ரங்கசாமிக்கு வாக்குச் சேகரிக்கும் விதமாக, அத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சின்னம் பொருந்திய சிறிய பேப்பர்களை ஒவ்வொரு வாக்குச்சாவடியின் அருகிலும் சாலையில் வீசிவிட்டுச் சென்றனர்.

அதேபோல், வினோபா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அருகிலும் என்.ஆர்.காங்கிரஸார் வீசினர். அப்போது, இதனைக் கண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தேர்தல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

ஆனால், புகார் அளித்தும் தேர்தல் அதிகாரிகள் அங்கு வரவில்லை. இதனால் ஆவேசமடைந்த இந்தியக் கம்யூனிஸ்ட், மநீம, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் தேர்தல் துறை அதிகாரிகளைக் கண்டித்து, கட்சி சின்னம் பொருந்திய சிறிய பேப்பர்களுடன் விநோபா நகர் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கு வந்த தேர்தல் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அவர்கள் மறியலைக் கைவிட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றபோது, போலீஸாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, நகராட்சி உழியர்கள் வரவழைக்கப்பட்டு, பேப்பர்கள் சுத்தம் செய்யப்பட்டது. இதன் பின்னர், அவர்கள் அனைவரும் மறியலைக் கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

இதேபோல், லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் உள்ள குளுனி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியைப் பார்வையிட என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இருசக்கர வாகனத்தில் வந்தார். அவருடன் ஆதரவாளர்களும் கூட்டமாக வந்தனர். இதனைக் கண்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, ஏர்போர்ட் சாலையில் சில நிமிடங்கள் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

சுயேச்சை வேட்பாளர் கார் உடைப்பு

திருபுவனை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் அங்காளன் தனது காரில் திருவாண்டார்கோயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு வந்தார். அப்போது, அத்தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ கோபிகாவின் ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் அங்காளனின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், காரின் பக்கவாட்டுக் கண்ணாடி உடைந்தது.

சுயேட்சை வேட்பாளர் கார் உடைப்பு.

மேலும், காரில் இருந்த அங்காளனையும் தாக்க முயன்றதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து, அங்காளன் திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், உழவர்கரை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் சிவசங்கரன் மேரி, உழவர்கரை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியைப் பார்வையிட தனது காரில் வந்தார். காரை அங்குள்ள சாலையோரம் நிறுத்திவிட்டு வாக்குச்சாவடிக்குள் சென்றார். பின்னர், சில மணி நேரத்தில் அவர் திரும்பி வந்து பார்த்தபோது காரின் பின்பக்கம் சேதமடைந்து, கண்ணாடி நொறுங்கிய நிலையில் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுயேச்சை வேட்பாளர் தர்ணா

நெல்லித்தோப்பு தொகுதியில் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அருண் (எ) முருகன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவர் நெல்லித்தோப்பு ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது, வாக்குச்சாவடி அருகிலேயே பாஜகவைச் சேர்ந்த சிலர் வாக்குகள் சேகரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்தார்.

சுயேச்சை வேட்பாளர் தர்ணா

இதனைத் தட்டிக்கேட்ட அவருக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வேட்பாளர் அருண் (எ) முருகன் பள்ளியின் எதிரில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதையடுத்து, அங்கு வந்த உருளையன்பேட்டை போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x