

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடியில் இன்று முற்பகல் வாக்களித்து விட்டு வெளியே வந்த நெசவுக் கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை அக்ரஹாரத்தில் உள்ள ஸ்டார் லைன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இன்று (ஏப்.06) காலை 7 மணி முதல் அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பள்ளியில் உள்ள 94-வது வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக வந்த அய்யம்பேட்டை ஆற்றங்கரை வடம்போக்கி தெருவைச் சேர்ந்த அர்ஜுனன் (62) என்ற முதியவர் வரிசையில் காத்திருந்து வாக்களித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது, அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
அவரை அங்கிருந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும், அவருக்கு நெஞ்சு வலி மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இறந்த முதியவர் அர்ஜுனன் நெசவுக் கூலித் தொழிலாளியாவார். இவருக்கு மனைவி மற்றும் மகன் மற்றும் மகள் உள்ளனர்.
வாக்களிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.